தைப்பூசம் – முருகப்பெருமானின் விழா
மலேசியா பல விதமான கலை மற்றும் கலாச்சாரங்கள் நிறைந்த தனித்தன்மையும் பன்முகத்தன்மையும் கொண்ட ஒரு நாடாகும். இங்கு பல இன மக்கள் தங்களின் மதம், இனம், மொழி, கலை, பண்பாடு, நாகரிகம், சமயம், இலக்கியம் எனச் சொந்த அடையாளங்களோடு ஒற்றுமையாகவும் இன்பமாகவும் வாழ்ந்து வருகின்றனர். இவற்றில் ஒன்றுதான் இந்து மதத்தைச் சார்ந்த தமிழர்கள் கோலாகலமாகக் கொண்டாடும் தைப்பூச திருவிழாவாகும். இவ்விழாவை தமிழர்கள் புத்துணர்ச்சியுடனும் பய பக்தியுடனும் கொண்டாடி வருகின்றார்கள். உலகம் முழுவதும் இத்திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டாலும் மலேசியா நாட்டிலிருந்துதான் அது வேரூன்றி பரவியது.
ஆதலால், நான் இவ்விழாவைப் பற்றிய சில தகவல்களை உதாரணத்திற்கு, அதன் தோற்றம், கொண்டாடப்படும் முறை மற்றும் கோவில்கள் ஆகியவற்றோடு நீங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள விரும்பினால், தங்குவதற்கு ஏதுவான இடங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இந்த கட்டுரையைப் படிப்பதன் மூலம், மலேசியாவில் கொண்டாடப்படும் புனிதமான மற்றும் பக்தி நிறைந்த இத்திருநாளைப் பற்றி உங்களால் ஆழமாக புரிந்து கொள்ள முடியும் என்று நான் பெரிதும் நம்புகின்றேன்.
திசெம் ரின்போச்சே
கவனத்திற்கு : இந்த கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள சில படங்களும் காணொளிகளும் உடம்பில் கொக்கிகளைக் குத்திக் கொள்ளும் காட்சி உட்பட மேனியை வருத்திக் கொள்ளும் சில காட்சிகளையும் உள்ளடக்கி இருப்பதால், இளகிய இதயம் உள்ளவர்களுக்கு உகந்தது அல்ல.
தைப்பூசம் இந்து மதத்தைச் சார்ந்த குறிப்பாக தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். தைப்பூசம் என்ற வார்த்தை, தமிழர் ஆண்டுக்குறிப்பேட்டில் வரும் தை மாதம் மற்றும் நட்சத்திர வரிசையில் வரும் பூசம் நட்சத்திரத்தையும் இணைத்து வந்தது. இத்திருநாள் தை மாதம் வரும் பெளணர்மி திதியில் கொண்டாடப்படும். ஆங்கில ஆண்டுக்குறிப்பேட்டின்படி இவ்விழா ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும். தமிழர் பஞ்சாங்கப்படி, பூச நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் நேரம் இதுவாகும்.
தைப்பூச திருநாள், தீய சக்திகளைக் கடவுள் அழித்ததைக் கொண்டாடும் ஒரு விழாவாகும். குறிப்பாக இவ்விழா, தெய்வலோகத்தை நோக்கி தாக்குதல் நடத்திய அசூரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே நடந்த போரின் போது பிறந்த முருகப்பெருமானுடன் தொடர்புடையது. இப்போரின் ஒரு கட்டத்தில், தேவர்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்ததோடு நிறைய சேதங்களையும் அடைந்தனர். சூரபத்மன் என்ற அசூரனின் தலைமையில் போரிட்ட அசூரர்களைத் தேவர்களால் தடுக்க இயலாமல் போனது. தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தபோது, அவர்கள் அனைவரும், மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானை அணுகினார்கள். தோல்வியின் விளிம்பில் இருந்த அவர்கள், சிவபெருமானை தங்களின் படையை வழிநடத்த ஒரு சிறந்த சக்திவாய்ந்த வீரனைப் பரிந்துரைக்க வேண்டினார்கள். அவர்கள் அனைவரும் சிவபெருமானிடத்தில் மனபூர்வமாகவும் பயபக்தியுடனும் சரணடந்தார்கள். அவர்களின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்த சிவபெருமான் தன்னுடைய தனிப்பட்ட சக்தியைக் கொண்டு ஒரு வீரனை படைத்தார். அந்த வீரன் முருகப்பெருமான் ஆவர். அவர் உடனே தேவர்களின் தளபதி பொறுப்பை ஏற்று அவர்களை வழிநடத்தி அசூரர்களைத் தாக்கி வீழ்த்தினார்.
ஆகவேதான், தைப்பூசத் திருநாளன்று, முருகப்பெருமானின் படங்களை அல்லது சிலைகளைப் பூக்களால் அலங்கரித்து, தேரில் அமர்த்தி, பக்தர்கள் படைசூழ ஊர்வலம் வருவார்கள். முருகப்பெருமான் அழகு, அறிவு, வீரம், ஞானம் மற்றும் சக்தி போன்ற அம்சங்களைக் கொண்டவராவார். அதுமட்டுமில்லாது, அவர் பக்தர்களின் வேண்டுதல்களையும் கோரிக்கைளையும் நிறைவேற்றும் உலகக் கடவுள் என்று இந்துக்கள் கருதுகின்றனர். அதனால்தான் பக்தர்கள் தங்களின் பிரார்த்தனைகளும் கோரிக்கைகளும் பூர்த்தியடைய வேண்டும் என்று தங்களை வருத்தி வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். பெரும்பாலும் இவர்களின் வேண்டுதல்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள காவடிகளின் வடிவத்தில் இருக்கும்.
முருகப்பெருமான் யார்?
முருகப்பெருமான் இந்து கடவுள்.அவருக்கு கார்த்திக்கேயன், சுப்ரமணியன், ஸ்கந்தா, சண்முகா, சதனா, குகன், செந்தில், சரவணன் மற்றும் குமரசுவாமி போன்ற பல பெயர்கள் உண்டு. சிவன் மற்றும் பார்வதியின் மகனான முருகன், அறிவு மற்றும் வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றார். அதனால்தான், போர் மற்றும் வெற்றியின் கடவுளாக முருகன் வணங்கப்படுகின்றார். முருகன் தேவர்களின் வீரமிகுந்த தலைவராகவும் மனிதர்களின் தீய சக்தியைப் பிரபலிக்கும் அசூரர்களை வெல்வதற்காகவுன் படைக்கப்பட்டார்.
புராணக்கதைகளின்படி, சிவபெருமானும் பார்வதி தேவியும் முருகனின் சகோதரனான விநாயகப்பெருமானிடம் கூடுதலான அன்பு கொண்டிருக்கிறார்கள் என்ற தவறான கருத்தால் முருகப்பெருமான் தன் குடும்பத்தை விட்டு விலகி கைலாச மலைக்குச் சென்று அதன் பின் தென்னிந்தியாவில் உள்ள மலைகளுக்குச் சென்றாராம். சிவபெருமான் வற்புறுத்தியும் கூட, அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால்தான் முருகப்பெருமான் வட இந்தியாவைக் காட்டிலும் தென்னிந்தியாவில் பெரிதும் வணங்கப்படுகின்றார்.
முருகப்பெருமான் தன் கரங்கள் ஒன்றில் வேல் ஏந்திருப்பார். முருகப்பெருமானின் அன்னையான பார்வதிதேவியார், தன் சக்தியை உள்ளடக்கிய வேலை அவருக்கு அளித்ததாக புராணங்கள் கூறுகின்றன. பார்வதிதேவியார் முருகனுக்கு வேலை அளித்த தினத்தை நினைவுபடுத்தவே தைப்பூச திருநாள் கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அவரின் மற்றுமொரு கரத்தினில் அபாயமுத்திரை அல்லது யாமிருக்க பயமேன் எனும் முத்திரை இருக்கும். இம்முத்திரை பயத்தினை போக்கி பாதுகாப்பு, இன்பம், ஆன்மீக பாதுகாப்பு போன்றவற்றை அருளிக்கும் முத்திரையாகும். மயில்மேல் அமர்ந்திருப்பது மனதின் ஆசைகளைஅடக்கியாள்வதைக் குறிக்கின்றது. அதோடு முருகனின் வாகனமான மயில், தனது காலிடுக்கினில் பாம்பினை பிடித்திருப்பது தீய பழக்கங்களையும் தீய சக்திகளையும் அழிப்பதைக் குறிக்கின்றது. முருகப்பெருமான் சக்தியையும் பலத்தையும் பிரதிநிதிப்பதால், தங்களின் துயரம் போக்கி சக்தியையும் பலத்தையும் தங்களுக்கு அளிப்பதாக பக்தர்கள் நம்புகின்றார்கள்.
முருகப்பெருமான் மிகவும் சக்திவாய்ந்த அசூரர்களின் தளபதியான சூரபத்மனை, தான் பிறந்த 7வது நாளில் அழித்தார். ஆதலால், அவர் இந்து கடவுள்களில் மிகவும் கோபக்கார கடவுளாகவும் அறியப்படுகின்றார். இவர் வீரனாகவும் இந்து தர்மத்தைக் காக்கும் கடவுளாகவும் போற்றப்படுகின்றார்.
முருகப்பெருமானின் ஆறு முகங்கள், ஐம்புலன்களையும் மனதையும் பிரதிபலிக்கின்றன. அவரின் ஆறுமுகங்கள் ஆறு திசைகளைப் பார்க்க உதவுவதுடனும் எத்திசையிலிருந்தும் எதிர்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் உதவுகின்றன. ஆறுமுகங்கள் கொண்ட போர்க்கடவுளான முருகப்பெருமான், பக்தர்கள் தங்களின் பிரச்சனைகளையும் துன்பங்களையும் எதிர்கொள்வதற்கும் பேராசை, காமம், குரோதம், மோகம், கர்வம் மற்றும் பொறாமை போன்ற தீய எண்ணங்களுக்கு அடிமையாகாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் கற்றுத் தருகின்றார்.
முருகப்பெருமானுக்கு வள்ளி மற்றும் தெய்வானை என்று இரு துணைவியர் இருக்கின்றனர். வள்ளி குறவர் குலத்தைச் சேர்ந்தவர். தெய்வானை, தேவர்களின் அரசனான தேவேந்திரனின் மகளாவர். இவர்கள் இருவரும் விஷ்ணுவின் விழியிலிருந்து பிறந்த இரு மகள்களான அமிர்தவள்ளி மற்றும் செளந்தரவள்ளியின் அவதாரமாகும். அவர்கள் இருவரும் முருகப்பெருமான் மீது அதீத காதலும் பக்தியும் கொண்டதோடு அவரைத் தன் கணவனாக அடைய கடுந்தவம் புரிந்தனர். அவரின் கட்டளைக்கிணங்க, அமிர்தவள்ளி தெய்வலோகத்தில் இந்திரனின் பாதுகாப்பில் தெய்வானையாக அவதரித்தார். செளந்தரவள்ளி, காஞ்சிபுரம் அருகே நம்பிராஜா என்ற வேட்டையனுக்கு மகளாக அவதரித்தார். “வள்ளி” என்பது ஒரு வகையான கொடியின் பெயராகும். கொடிகளின் மத்தியில் கண்டெடுக்கப்பட்டதால் வேட்டையன், வள்ளி என்று பெயரிட்டார்.
சூரபத்மனுடனான போர் முடிவடைந்ததும், தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அதன்பின்தான், முருகப்பெருமான், இந்திரனின் வேண்டுதலை ஏற்று தெய்வானையைத் தனது துணைவியாக ஏற்றுக் கொண்டார். அவர்களின் திருமணம் மதுரைக்கு அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதிதேவியாரின் தலைமையில் கோலாகலமாக நடந்தேறியது. அதைத் தொடர்ந்து அமராவதி எனப்படும் தெய்வலோகத்தில் இந்திரனின் முடி சூட்டு விழாவும் நடந்தது. அதேபோல் மற்ற தேவர்களும் தங்களின் பதவிகளை மீண்டும் கைப்பற்றினர்.
முருகப்பெருமான் தனது குடும்பத்தை ஸ்கந்தகிரியில் அமைத்து விட்டு, சென்னைக்கு அருகாமையில் உள்ள திருத்தணிக்கு வள்ளியைத் தேடிச் சென்றார். பலவிதமான தந்திரங்களை மேற்கொண்ட முருகப்பெருமானின் மாறுவேடத்தை உணர்ந்த வள்ளிதேவியார் அவரை மணந்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.
காவடி
சுமை ஆட்டம் எனப் பொருள்படும் காவடி ஆட்டம், பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களையும் நேர்த்திக் கடனையும் நிறைவேற்றும் ஒரு வழிமுறையாகும். தைப்பூச திருவிழாவின் போது காவடி எடுப்பது ஒரு வழக்கமாகும். இது முருகப் பெருமானின் அன்பிற்குப் பிரதிபலனாய் தங்களை வருத்திக் கொள்வதை வலியுறுத்துகின்றது.
காவடி என்பது பக்தர்கள் தங்களின் உடலில் சுமை சுமந்து சென்று முருகப்பெருமானிடம் தங்களின் வேண்டுதலைக் கூறுதல் அல்லது நன்றிக் கடன் செலுத்தும் ஒரு முறையாகும். பெரும்பாலும் தங்களின் அன்புக் குரியவர்களின் உடல் நலம் வேண்டியோ அல்லது நிறைவேற்றப்பட்ட வேண்டுதல்களுக்கு நன்றிக்கடனாகவோ காவடி எடுக்கப்படுகின்றது. காவடி எடுக்கும் பக்தர்கள் வித விதமான காவடிகளை ஏந்தி நடந்தும் நடனம் ஆடிக் கொண்டும் பாத யாத்திரை மேற்கொள்வார்கள்.
காவடியின் தோற்றம்
ஏழு வேத முனிவர்களில் மிகவும் புகழ்பெற்ற ஒருவரான அகத்திய ரிஷி, தெற்கில் இருந்த சிவகிரி மற்றும் சக்திகிரி என்ற இரு மலையை தன் இருப்பிடமாக கொள்ள எண்ணினார். தன் சிஷ்யர்களில் ஒருவரான அசூரன் இடும்பனை அம்மலைகளைத் தூக்கி வர பணித்தார். முருகப்பெருமானின் படைகளுக்கும் சூரபத்மனின் சேனைகளுக்கும் இடையே நிகழ்ந்த போரில் உயிர் பிழைத்த அசூரர்களில் இடும்பனும் ஒருவர். போர் முடிந்ததும், மனம் திருந்தி முருக பக்தராய் மாறினார் இடும்பன்.
இந்த நிலையில், முருகப்பெருமான் ஒரு போட்டியில் விநாயகப்பெருமானிடம் தோல்வியடைந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் உலகை மூன்று முறை சுற்றி வரும்படி ஒரு போட்டி நடத்தப்பட்டது. முருகப்பெருமான் தன் வாகனமான மயிலின் மேல் ஏறி உலகை மூன்று முறை வலம் வர புறப்பட்டார். ஆனால், விநாயகப்பெருமான், பயபக்தியுடன் தனது பெற்றோரை மூன்று முறை வலம் வந்து ஞான பழத்தைப் பெற்றுக் கொண்டார். விநாகப்பெருமான், இவ்வுலகம் தன் பெற்றோரில் உள்ளடக்கியுள்ளது என்ற தத்துவம் கூறி தன் தாய் தந்தையரின் பாசத்தை உலகுக்குக் காட்டினார். உலகை மூன்று முறை வலம் வந்து விட்டு திரும்பிய முருகப்பெருமான் ஞானப்பழம் விநாகயப்பெருமானுக்கு அளிக்கப்பட்டதை அறிந்தார்.
கோபமுற்ற முருகப்பெருமான், தனது குடும்பத்தையும் வீட்டையும் விட்டு வெளியேறுவதாக சபதம் எடுத்தார். அவர், ஆடிவரத்தில் உள்ள திருஆவினன்குடி அதாவது சிவகிரியின் பாதம் என்றறியப்பட்ட இடத்திற்கு வந்தார். முருகனே ஞானம் மற்றும் அறிவின் பழம் என்று சிவபெருமான், முருகப்பெருமானைச் சமாதானப்படுத்தினார். அன்றுமுதல் அவ்விடம் பழம்-நீ அல்லது பழனி அதாவது நீயே பழம் என்ற பெயர் பெற்றது. கோபம் தணிந்த முருகப்பெருமான் பின் அம்மலையிலேயே அமைதியுடனும் சாந்தத்துடனும் அமர்ந்தார்.
இடும்பன் தன் தோள்களில் சிவகிரி மற்றும் சக்திகிரி மலைகளை காவடி வடிவில் சுமந்து வந்தான். பழனியை அடைந்தபொழுது மிகவும் களைப்புற்ற அவன், தனது காவடியைக் கீழே இறக்கி வைத்து விட்டு இளைப்பாறினான்.
இளைப்பாறிய பின், தனது பயணத்தைத் தொடர நினைத்த இடும்பன், இரு மலைகளைத் தூக்க முற்பட்ட போது, அவனால் தூக்க இயலவில்லை. முருகப்பெருமான் இடும்பனால் தூக்க இயலாதபடி மலைகளின் பாரத்தைக் கூட்டியிருந்தார். மலையின் உச்சியில் கோமணம் கட்டியடி நின்று கொண்டிருந்த சிறுவனை இடும்பன் கண்டான். அவன், தனது பயணத்தைத் தொடர்வதற்காக, அந்த சிறுவனை மலையிலிருந்து இறங்கி போக உத்தரவிட்டான். ஆயினும், அச்சிறுவன் இடும்பனின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கவில்லை. தனது பொறுமையை இழந்து கோபமுற்ற இடும்பன் தனது வீரத்தையும் அசூர சக்தியையும் கொண்டு சிறுவனை தாக்க முயன்றான். இருப்பினும்,அவனால் சிறுவனை அந்த மலையிலிருந்து வெளியேற்ற முடியாததைக் கண்டு அதிர்ச்சியுற்றான். மாறாக, தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டான்.
இடும்பன் தனது கோபம் தணிந்து மன அமைதி கொண்டவுடன், எதிரே நிற்கும் சிறுவனின் சுயத்தை உணர்ந்து பயபக்தியுடன் தனது இரு கரம் கூப்பி வணங்கினான். முருகப்பெருமான் தனது உருவத்தை இடும்பனுக்குக் காட்சியளித்ததோடு தான் இடும்பனின் குருபக்தியையும் மன உறுதியையும் மெச்சுவதாக கூறினார். முருகப்பெருமான் அன்று முதல் இடும்பனை தனது காவலனாக நியமித்தார்.
அன்றுமுதல் எவரொருவர் இடும்பன் சுமந்து வந்த இரு மலைகளைப் போன்று காவடி சுமந்து வந்து மனமுருகி வேண்டுகிறார்களோ அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக அறிவித்தார். இடும்பன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளை முருகப்பெருமானிடம் முன் வைக்க, அதனை முருகப்பெருமானும் ஏற்று நிறைவேற்றினார்:
- எவரொருவர் மனமுருகி வேண்டி தனது தோள்களில் காவடி சுமந்து கோவில்களில் முருகப்பெருமானை வணங்குகின்றார்களோ, அவர்களுக்கு முருகப்பெருமானின் ஆசி கிட்ட வேண்டும்.
- தனக்கு மலையின் வாசலில் காவல் புரியும் உரிமை வழங்கப்பட வேண்டும்.
இப்படித்தான் தங்களின் வேண்டுதல் நிறைவேற வேண்டியோ அல்லது பெற்ற ஆசிக்கு நன்றிக்கடனாகவோ காவடி சுமக்கும் வழக்கம் உருவானது. இன்று வரை, எல்லா முருகன் ஆலயங்களிலும் கோவில் வாசலில் காவலனாக இடும்பன் வணங்கப்படுகிறார்.
காவடி ஆட்டத்திற்கான ஏற்பாடுகள்
காவடி ஆட்டத்திற்கான ஏற்பாடுகள் தைப்பூசத்திற்கு 48 நாட்கள் முன்னதாக தொடங்கும். பக்தர்கள் அனைவரும் உடல் மற்றும் மன ரீதீயிலான தீய எண்ணங்கள் மற்றும் தீய செயல்களிலிருந்து தங்களைக் கட்டுபடுத்தி விரதம் இருப்பார்கள். அவர்கள் நாள் ஒன்றுக்கு ஒரு வேளை உணவாக சைவ உணவு உட்கொள்வதோடு தைப்பூச திருநாளுக்கு 24 நான்கு மணி நேரம் இருக்கும்பொழுது முழு விரதமும் இருப்பார்கள்.
பக்தர்கள் தங்களைக் கீழ்கண்ட வழிமுறைகளைக் கொண்டு தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்:
- ஆசைகளை அடக்கியாளுதல்
- கண்டிப்பான சைவத்தைக் கடைபிடித்தல்
- மொட்டையடித்தல்
- பாலியல் உறவைத் தவிர்த்தல்
- குளிர் நீரில் குளித்தல்
- தரையில் படுத்துறங்குதல்
- தொடர்ச்சியான வழிபாடு
- போதை தரும் பொருட்களைத் தவிர்த்தல் (போதைப்பொருள் மற்றும் மதுபானம்)
- கோபப்படாமல் இருத்தல்
- உடல் அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களைத் தவிர்த்தல்
- கேளிக்கைகளைத் தவிர்த்தல்
- சூரியோதத்திற்கு முன் எழுந்து முருகன் நாமம் சொல்லுதல் மற்றும் தியானம் செய்தல்
தைப்பூசத்தன்று, குரு அல்லது பூசாரி ஒருவர் பூஜைகள் செய்து தொடக்கி வைப்பார். பக்தர்கள் சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்திலான ஆடைகளை அணிவர்; காவடி எடுப்பவர்கள் பெரும்பாலும் நாள் முழுதும் மெளன விரதம் இருப்பார்கள். காவடி எடுப்பவர்களுக்கு பூஜை நடத்தப்படுவதோடு முருகப்பெருமானின் நாமங்களும் பயபக்தியுடன் கோஷமிடப்படும். பூஜை முடிந்ததும் பக்தர்கள் தங்களின் காவடிகளைத் தூக்குவதற்குத் தயாராகி குருவின் ஆசியை வேண்டுவார்கள். குருவும் காவடியைத் தூக்கி அவர்களின் தோளில் வைத்து காவடி ஆட்டத்தைத் துவக்கி வைப்பார்.
பக்தர்கள் தவில் வாத்தியம் மற்றும் நாதஸ்வர இசைக்கு ஏற்றவாறு காவடி ஆட்டம் ஆடுவார்கள். பக்தர்கள் ஆழ்ந்த பக்தியுடனும் பரவசத்துடனும் மெய்மறந்த நிலையில் ஆடுவார்கள். இந்த ஆட்டம் பக்தியும் எழுச்சியும் ஊட்டுவதாக இருப்பதோடு காவடி ஆட்டம் ஆடுபவர்களின் முகத்தினில் ஒரு தெய்வீக கலையும் இருக்கும். பக்தர்கள் முருகப்பெருமானுடன் இணைந்த உணர்வினை அடைகின்றனர். சில சமயங்களில் முருகப்பெருமான் இவர்களுக்குள் நுழைந்து இவர்களை மெய் மறக்கச் செய்வதாகவும் நம்பப்படுகின்றது.
காவடி ஆட்டத்திற்கான பாடல்
காவடி ஆட்டத்தின் மரபு மிகவும் வலிமையானது. அது பராம்பரிய நடனங்களையும் உதாரணத்திற்கு பரத நாட்டியம் போன்றவற்றையும் கவர்ந்தது. பரத நாட்டியம் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததோடு நளிமான ஒரு நடனமாகும். கீழே காவடி சிந்து எனப்படும் ஒரு பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய காணொளியைக் காணலாம். நீங்கள் “Play” என்ற விசையை அழுத்தி இணையத்தில் நேரடியாக கேட்கலாம் அல்லது பதிவிறக்கம் விசையை அழுத்தினால் உங்களின் கோப்பை எம்பி3 ஒலி வடிவத்தில் மாற்றி, ஐபோட் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து விருப்பப்படும்போது கேட்கலாம்.
காவடி வகைகள்
காவடிகள் பல வடிவங்களிலும் அளவுகளிலும் மற்றும் பொருட்களிலும் இருக்கும். பார்ப்பதற்கு பல வகைகளிலும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டதாகவும் இருந்தாலும் அவற்றின் நோக்கம் முருகப்பெருமானுக்கோ அல்லது மற்ற தெய்வங்களுக்கோ தங்களின் பக்தியை வெளிப்படுத்துவதே ஆகும்.
1. தோள் காவடி
தோள் காவடி பொதுவாக இரு அரை வட்டத்திலான பலகை அல்லது இரும்பை வளைத்து பக்தர்களின் தோள் மேல் சமநிலையில் நிற்பதற்கு தராசு போன்ற வடிவத்தில் இணைக்கப்படிருக்கும். இது பூக்கள், மயிலறகுகள் கொண்டு முருகப்பெருமானின் குன்றுகளைப் போன்று அலங்கரிக்கப்டும்.
2. பால் காவடி
செம்பு அல்லது வெள்ளிக் குடங்களில் பால், விபூதி அல்லது மற்ற புனித பொருட்களை சுமந்து சென்று இறைவனுக்கு காணிக்கையாக வழங்குவார்கள்.
3. மயில் காவடி
இந்த வகையான காவடிகள் கண்கவரக்கூடியதாக இருக்கும். இவை பெரும்பாலும் எளிமையானதாக குறைந்தது 2 மீட்டர் உயரத்தில் (ஏறத்தாழ 6.6 அடி வரைக்கும்) அல்லது கூடுதலான உயரத்தைக் கொண்டிருக்கும். இவை மயிலறகுகளால் அல்லது சில சமயங்களில் வர்ணம் பூசி செதுக்கப்ட்ட பாலீஸ்திரீன்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு பக்தர்களின் உடம்பில் 108 வேல்களால் கொண்டு குத்தி இணைக்கப்படும். இந்த காவடிகளில் சில 40 கிலோ வரை எடை கொள்ளும்.
4. அலகு காவடி
இவ்வகை காவடியில் பக்தர்கள் தங்களின் நாக்கில் அல்லது கன்னத்தில் பல விதமான வேல்களைக் குத்தி கொள்வார்கள். பக்தர்களின் நாக்கினில் அல்லது கன்னத்தினில் குத்தப்படும் வேல் அவர்களுக்கு முருப்பெருமானை நினைவுறுத்தும். இது அவர்கள் பேசுவதிலிருந்து தடுத்து அவர்களுக்கு பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்.
5. கொக்கி காவடி
கொக்கி காவடி வகையில் வளைந்த வெள்ளி ஊசிகள் போன்ற கொக்கிகள் பக்தர்களின் உடம்பில் குத்தப்பட்டிருக்கும். அக்கொக்கிகள் ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு மற்றமொரு பக்தரால் இழுக்கப்பட்டோ அல்லது தேரை இழுப்பதற்கோ பயன்படுத்தப்படும்.
6. குடம் முள் காவடி
இவ்வகையான காவடியில் பக்தர்கள் தங்களின் உடலை சிறு வளைந்த ஊசிகளைக் (கொக்கிகள்) கொண்டு குத்திக் கொள்வார்கள். பிறகு, பல வகையான பொருட்களை உதாரணத்திற்கு சிறு பால்குடங்கள், விபூதி, சந்தனம் அல்லது குங்குமம் போன்றவற்றை கொக்கியில் மாட்டி விடுவார்கள். இவையனைத்தும் கடவுளுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளாகும். சில சமயங்களில் பழ காணிக்கைகள் கூட கொக்கியில் மாட்டப்படும்.
காவடி ஆட்டத்தில் மெய்மறக்கும் நிலை
தைப்பூசத்தின் போது பல பக்தர்கள் பக்தியில் மெய்மறக்கும் காட்சி வழக்கமான ஒரு காட்சியாகும். காவடி ஏந்துபவர்கள் பெரும்பாலும் தங்களின் சகோதர சகோதரிகள், கணவன் மனைவி அல்லது மற்ற உறவினர்களால் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள். பக்த கோடிகளில் பெரும்பாலானோர் தங்களின் நேர்த்திக்கடானாக முதலில் தங்களின் முடியைக் காணிக்கை கொடுத்து மொட்டை அடித்து விடுவதும் உண்டு.
வேல் மற்றும் கொக்கிகளின் கூர்மை கடும் வலியைக் கொடுக்கும். சில சமயங்களில் தெய்வங்களின் சக்தி இவர்களின் உடம்பில் ஏறுவதால் பக்தர்கள் கடும் வலியை உணருவதில்லை என்று நம்பப்படுகின்றது. உண்மையில் சில பக்தர்கள் கொக்கி அல்லது வேல் குத்தப்படும் வேளையில் மட்டுமே தங்களால் வலியை உணர முடிகிறது என்று கூறுகின்றனர். பல வகையான மன நிலையில் மாறி மெய் மறக்கும் நிலையை எட்டும் பொழுது வலியை மட்டும் அல்ல அவர்களால் தங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் உணர முடிவதில்லை. அவர்களின் மெய் மறந்த நிலை முடிவுக்கு வரும்பொழுது அவர்கள் கோவிலை அடைந்து விடுவதோடு கடந்து வந்த பயணம் பலருக்கு நினைவில் கூட இருப்பதில்லை.
குத்தப்பட்ட கொக்கிகளும் அலகும் கழற்றி எடுக்கப்படும் பொழுது, தெய்வங்களின் ஆசியால் சிறிதளவு கூட ரத்தம் வருவதில்லை மற்றும் காயங்களும் சீக்கிரமே ஆறி விடுகின்றன.
மலேசியாவில் இந்து மதம்
இந்து மதம் மலேசியாவில் நான்காவது இடத்தில் இருக்கும் மதமாகும். மலேசிய புள்ளி விவர துறையின் 2010-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை அறிக்கையின்படி, மலேசியாவில் மொத்தம் 1.78 மில்லியன் இந்துக்கள் (மலேசியத் தொகையில் ஏறக்குறைய 6.3%) வசிக்கின்றனர்.
பெரும்பாலான மலேசிய இந்துக்கள் தீபகற்ப மலேசியாவில் மேற்கு பகுதிகளில் வசிக்கின்றனர். இந்துக்களின் அதிகபட்ச மக்கள் தொகை இருக்கும் மாநிலங்கள், நெகிரி செம்பிலான் (13.4%) தொடர்ந்து சிலாங்கூர் (11.6%), பேராக் (10.9%) மற்றும் கோலாலம்பூர் (8.5%). குறைந்த பட்ச இந்துக்கள் அதாவது 0.1% கொண்ட மாநிலம் சபாவாகும்.
மலேசியாவில் தைப்பூசம்
மலேசியாவில் வருடந்தோரம் தைப்பூசம் கோலாகலமாககொண்டாடப்படுகின்றது. அதுமட்டுமில்லாது கூட்டரசு மாநிலங்களான கோலாலம்பூர், புத்ரா ஜெயா மற்றும் ஜோகூர், நெகிரி செம்பிலான், பேராக், பினாங்கு மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் தைப்பூச திருநாளன்று பொது விடுமுறை வழங்கப்படுகின்றது. ஓவ்வொரு வருடமும் ஒரு மில்லியனுக்கும் மேலான இந்துக்கள் மலேசியா முழுதும் உள்ள ஆலயங்களில் தைப்பூச திருநாளைக் கொண்டாட கூடுகின்றார்கள்.
இத்திருநாள் இந்து நாட்காட்டிப்படி தை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியில் அதாவது ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படுகின்றது. மலேசியாவில் தைப்பூச திருநாள் கோலாலம்பூருக்கு அருகில் இருக்கும் பத்து மலையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. மற்ற மாநிலங்களில் அதாவது பினாங்கு அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் (தண்ணீர்மலை கோவில் என்றும் அழைக்கப்படும்) மற்றும் ஈப்போவில் உள்ள அருள்மிகு கல்லுமலை சுப்ரமணியர் ஆலயம் ஆகிய இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
நேஷனல் ஜியோக்ஃரபி அலைவரிசையிலிருந்து ஒரு காணொளி
Or view the video on the server at:
https://video.tsemtulku.com/videos/Thaipusam.mp4
கோலாலம்பூரில் தைப்பூசம்
பக்தர்கள் காலை 4 மணி முதலே தைப்பூச திருவிழாவிற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி விடுவர். தைப்பூச வெள்ளிரத ஊர்வலம் மற்றும் பக்தர்களின் பாதயாத்திரை, சைனாடவுனில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து துவங்கும். முருகப் பெருமான் மற்றும் வள்ளி தெய்வானையின் சிலைகளைத் தாங்கியபடி, வெள்ளிரத ஊர்வலம் பத்துமலையை நோக்கி புறப்பட்டு, மதிய வேளையிலே அங்கு சென்றடையும்.
இந்த இரதம் முதன் முதலாக 1893-ம் ஆண்டு, 350 கிலோகிராம் வெள்ளி மற்றும் மலேசிய ரிங்கிட் 350,000 செலவில் உருவாக்கப்பட்டது. இந்த இரதம் ஏறக்குறைய 6.5 மீட்டர் நீளம் கொண்டது. மேலும் அதில் 240 மணிகள் தொங்க விடப்பட்டுள்ளன. இந்த வெள்ளிரதம் 12 பாகங்களாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது ஆகும். இந்தியாவிலிருந்து அந்த பாகங்களை இறக்குமதி செய்து, இங்கே நம் மலேசிய திருநாட்டில் 1893 ஆம் ஆண்டு இணைக்கப்பட்டது.
தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் அடிவாசலில் நடைபெறும். சிலைளைத் தாங்கிய வெள்ளிரதம் ஆலயத்தை வந்தடைந்ததும், பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களையும் காணிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வர். காவடி ஏந்தும் பக்தர்கள் முதலில் தங்களை தூய்மைபடுத்திக் கொள்வர். 48 நாட்கள் விரதம் மற்றும் சுயகட்டுபாட்டின் காரணமாக தைப்பூச திருவிழா அன்று பக்தர்கள் தன்நிலை மறந்து, கடவுள் நாமத்தை உச்சரித்தபடி இருப்பர். பிரார்தனைகளை நிறைவேற்றும் பக்தர்கள் அலகுகளை குத்திக் கொள்வர். கடவுள் நாமத்தை உச்சரிக்கும் இவர்களுக்கு வலி என்பது இருக்காது.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் பக்தர்கள் 272 படிகள் கொண்ட பத்து மலையின் நுழைவாயிலுக்கு ஏறிச் செல்வர். படிகளை ஏறும் பக்தர்கள் பல வகையான காவடிகளை ஏந்திச் செல்வர். சில காவடிகள் 100 கிலோகிராம் எடையுள்ள காவடிகளாக இருக்கும். கடவுள் நாமத்தை பாடிக்கொண்டே, காவடி ஏந்தும் பக்தர்கள் படிகளை ஏறி முருகனை காணச் செல்வர். பல வண்ணங்களிலும் அளவுகளிலும் காவடிகள் இருப்பதால், திரளாக வந்திருக்கும் பக்த கோடிகள் பத்து மலையின் அடிவாரத்திலிருந்தும் கண்டு களிக்கலாம்.
காவடி ஏந்தும் பக்தர்கள், மலையின் உள்ளே அமைந்துள்ள முருகன் சந்நிதானாத்திற்கு வந்தடைந்ததும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காவடிகள் முருகன் சந்நிதானாத்தில் இறக்கி வைக்கப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த இரத ஊர்வலத்தில் கலந்து கொள்வர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களின் காவடிகளை முருகன் சந்நிதானாத்தில் இறக்கி வைக்க காத்திருப்பர்.
தைப்பூச திருவிழாவைக் காண விரும்பும் பக்தர்கள் காலையில் அல்லது மாலையில் பத்து மலைக்குச் சென்றால் நண்பகல் வெயில் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
நீங்கள் தைப்பூச திருநாளன்று பத்துமலைக்கு வருகை புரிய விரும்பினால், காலையில் அல்லது மாலையில் செல்வது நல்லது. ஏனெனில்,பகல் வேளையில் மிகவும் உஷ்ணமாக இருக்கும்.
பத்து மலை ஆதிகாலத்தில் ‘தெமுவான் மக்களால்’ பயன்படுத்தப்பட்டது. சீன குடியேறிகள் தங்கள் விவசாய நிலங்களை உரமிட பத்து மலையை தோண்டினர். இருப்பினும் பத்து மலை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் புகழ் பெற செய்யப்பட்டது.
பத்து மலையின் நுழைவாயில் வேல் வடிவத்தில் அமையப்பெற்றதை பார்த்து மலேசிய தமிழ் வர்த்தகரான க.தம்புசாமி பிள்ளை பத்து மலையை கடவுளை வணங்கும் இடமாக அறிமுகப்படுத்தினார். கால ஓட்டத்தில் அதே இடம் முருகனை தரிசிக்கும் இடமாக அறியப்பட்டு, தம்புசாமி ஐயா முருகன் திருவுறுவ சிலையை அங்கே நிறுவினார். 1920-ஆம் ஆண்டு, 272 பலகை படிகட்டுகளை நுழைவாசல் வரை நிறுவி பத்து மலையின் உள்ளே செல்ல வழி வகுத்தார். அதன் பின்பு அவை சிமென்ட் படிகட்டுகளாக மாற்றப்பட்டன.
மேலும் பத்து மலை உலகிலேயே மிகப் பெரிய முருகன் சிலையையும் தற்போது நிறுவி உள்ளது. அச்சிலை 42.7 உயரம் கொண்டு, மூன்று ஆண்டுகள் கட்டுமான பணிகளுக்கு பிறகு 2006-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்த முருகன் சிலை மலேசியா மற்றும் கோலாலம்பூர் மாநகரின் முக்கிய நினைவுச் சின்னமாக திகழ்கின்றது. உலகில் உள்ள மக்கள் கோலாலம்பூரை பற்றி நினைவு கூறும் பொழுது, இந்த முருகன் சிலை அவர்கள் நினைவில் கண்டிப்பாக பசுமரத்தாணி போல் இருக்கும்.பத்துமலை இந்துக்களின் முக்கிய சமயம் சார்ந்த இடமாக மட்டும் இல்லாமல், கோலாலம்பூரின் ஒரு முக்கிய சுற்றுலா தளமாகவும் அமைந்துள்ளது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் வெள்ளி ரத ஊர்வலம்
Or view the video on the server at:
https://video.tsemtulku.com/videos/ThaipusamSilverChariot.mp4
பத்து மலைக்கு செல்லும் வழி
வடக்கு கோலாலம்பூரின் நகர மையத்திலிந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் பத்து மலை இருக்கின்றது. திருவிழா காலங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிரமம் இருக்கும் என்பதால் அன்பர்கள் பொதுபோக்குவரத்தை உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகின்றார்கள். தைப்பூசத்தன்று பக்தர்களுக்காகவும் வருகையாளர்களுக்காகவும் கேல் சென்டரிலிருந்து (KL Sentral) பத்து மலைக்கு சிறப்பு பேருந்து சேவை வழங்கப்படுகின்றது. நகரத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் வாடகை வண்டி கிடைக்கும்.
இவைகளில் மிகவும் எளிதான வழி பத்து மலை நிலையத்திற்குச் செல்லும் கேடிஎம் (KTM) ரயில் சேவையைப் பயன்படுத்துவதாகும் (பத்து மலை – சிரம்பான் செல்லும் பாதை).கோலாலம்பூர் நகரத்திலிருக்கும் கேஎல் சென்டரிலிருந்து நீங்கள் கேடிஎம் ரயில் சேவையைப் பயன்படுத்தலாம். இது நகரத்தின் முக்கியமான இரயில் நிலையம் மற்றும் ஒரு வழிப்பாதைக்கு ரிங்கிட் மலேசியா 5 வெள்ளிக்கும் குறைவாகத்தான் வசூலிக்கப்படும். கேஎல் சென்டரில் வாடகை வண்டியும் கிடைக்கும். நீங்கள் திதிவங்சா (Titiwangsa) பேருந்து நிலையத்திலிருந்து U6 பேருந்தில் ஏறியும் பத்து மலைக்குச் செல்லலாம்.
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயம்
ஆலயம் மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்த மேல் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளலாம்.
முகவரி:
68000 Batu Caves, Selangor,
Malaysia.
தொலைபேசி எண்: +603 6189 6284
தொலை நகல் எண்: +603 6187 2404
மின்னஞ்சல்:batu_caves@yahoo.com
கேஎல் சென்ட்ரல் நிலையத்திற்கு அருகிலுள்ள தங்கும் விடுதிகள்
கேஎல் சென்ட்ரல் நிலையத்திற்கு அருகிலுள்ள தங்கும் விடுதிகளின் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. இதைத் தவிர்த்து இப்பகுதியில் உள்ள மற்ற தங்கும் விடுதிகளின் தகவல்களை நீங்கள் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
லீ மெரிடியன் கோலாலம்பூர் (Le Meridien Kuala Lumpur) (4 நட்சத்திர ஹோட்டல்)
முகவரி:
2 Jalan Stesen Sentral,
Kuala Lumpur Sentral,
50470 Kuala Lumpur,
Malaysia.
தொலைபேசி எண்: +603 2263 7888
வலைதளம்: http://www.lemeridienkualalumpur.com
ரோசிஸ் ஹோட்டல் கேஎல் சென்ட்ரல் (Royce Hotel KL Sentral) (3.5 நட்சத்திர ஹோட்டல்)
முகவரி:
20 & 22 Jalan Tun Sambanthan 3,
50470 Kuala Lumpur,
Malaysia.
தொலைபேசி எண்: +603 2276 2420
வலைதளம்: http://roycehotel-kl.com
ஹோட்டல் சென்ட்ரல் கோலாலம்பூர் (Hotel Sentral Kuala Lumpur) (3 நட்சத்திர ஹோட்டல்)
முகவரி:
30 Jalan Thambypillai, Brickfields
50470 Kuala Lumpur,
Malaysia.
தொலைபேசி எண்: +603 2272 6000
வலைதளம்: http://www.hotelsentral.com.my
பினாங்கில் தைப்பூசம்
பினாங்கில் தைப்பூசம் 3 நாட்களுக்குக் கொண்டாடப்படும். இந்த கொண்டாட்டம் தைப்பூசத்திற்கு ஒரு நாள் முன்பு தொடங்கி தைப்பூசத்தின் மறுநாள் வரை நீடிக்கும்.
முருகப்பெருமானுக்கான வழிபாடுகள் தைப்பூசத்திருநாளுக்கு ஒரு நாள் முன்பு, காலை 6 மணிக்குத் தொடங்கி விடும். வெள்ளி ரதமேறி வரும் முருகனுடன் பக்தர்களும் மயிலறகால் அலங்கரிக்கப்பட்ட காவடிகளைச் சுமந்து கொண்டு வலம் வருவார்கள். இரத ஊர்வலம் லிட்டல் இந்தியாவில் காலை 6 மணிக்குத் துவங்கி நள்ளிரவில் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயத்தில் முடிவுறும். இரத ஊர்வலத்தின் போது, பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்த தேங்காய்களை வழியெங்கும் உடைப்பார்கள். இந்த தேங்காய் உடைக்கும் வழக்கத்தை பினாங்கு டைம் ஸ்குவேரில் (Time Square) முன் இருக்கும் ஜாலான் டத்தோ கெராமாட்டில் (Jalan Dato Kerabat) கண்குளிர காணலாம். இரத ஊர்வலம் இந்த பகுதியை பெரும்பாலும் நண்பகலில் கடக்கும்.
தைப்பூசத் திருநாளன்று, கோலாலம்பூரில் நடப்பது போலவே, இங்கும் காவடி ஏந்தும் பக்தர்கள் தங்களின் உடம்பில் அலகு அல்லது கொக்கிகளைக் குத்திக் கொள்வார்கள். இது லோரோங் குளிட்டில் (Lorong Kulit) உள்ள ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் (பினாங்கு ரெபிட் அலுவலகத்திற்குப் பக்கத்தில்) காலை 3 மணிக்குத் துவங்கும். அதன்பின் காவடி ஏந்தும் பக்தர்கள் அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் (தண்ணீர்மலை கோவில்) 513 படிகளை ஏறத் துவங்குவார்கள். காவடிகளைக் காண்பதற்கு சரியான நேரம் மாலை 3 மணி முதல் ஆகும். பெரிய காவடிகளை ஏந்தும் பக்தர்கள் பொதுவாக தங்களின் பயணத்தை நாளின் இறுதியில் அதாவது ஏறத்தாழ இரவு 9.30 மணி முதல் தொடங்குவார்கள். பல வகையான சைவ உணவுகளும் சிற்றுண்டிகளும் 130 தண்ணீர் பந்தல்களில் கிடைக்கும். இந்த தண்ணீர் பந்தல்கள் பொதுவாக அலங்கரிப்பட்டு ஊர்வலம் வரும் வழி முழுவதும் அமைக்கப்படிருக்கும்.
தைப்பூசத்திற்கு மறுநாள் முருகப்பெருமானின் சிலை மாலை 6 மணியளவில் மீண்டும் நாட்டுக்கோட்டை செட்டியார் ஆலயத்திலிருந்து புறப்பட்டு செல்லும். இந்த ஊர்வலம் வேறொரு பாதையில் சென்று லெபோ பினாங்கில் உள்ள கோவில் வீடு ஆலயத்தில் முடிவுறும். இரத ஊர்வலத்தின் போது மீண்டும் தேங்காய் உடைத்து தாம்பூல தட்டுகளில் பழங்கள் மற்றும் பூக்களைக் காணிக்கையாகக் கொடுப்பார்கள்.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு செல்லும் வழி
பெருநாள் காலங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால், தண்ணீர்மலை ஆலயத்திற்கு வாடகை வண்டியில் செல்லுமாறு ஆலோசனை கூறப்படுகின்றது.
அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம்
கோவில் மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்த மேல் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளலாம்.
முகவரி:
Jalan Air Terjun,
10350 George Town,
Penang, Malaysia.
தொலைபேசி எண்: +604 6505 215
பினாங்கு சுற்றுலா நடவடிக்கை சபா
மற்ற விவரங்களுக்கும் பினாங்கு சுற்றுலா பற்றிய தகவல்களுக்கும் நீங்கள் பினாங்கு சுற்றுலா நடவடிக்கை சபாவைத் தொடர்பு கொள்ளலாம்.
முகவரி:
56th Floor, Komtar
10100 Penang,
Malaysia
தொலைபேசி எண்: +604 262 0202
தொலைநகல் எண்: +604 263 1020
மின்னஞ்சல்: enquiry@tourismpenang.gov.my
அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்திற்கு அருகில் உள்ள தங்கும் விடுதிகள்
ஆலயத்திற்கு அருகில் உள்ள தங்கும் விடுதிகளின் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. இதைத் தவிர்த்து மற்ற தங்கும் விடுதிகளின் தகவல்களை நீங்கள் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஜி ஹோட்டல் கேளவாய் பினாங்கு (G Hotel Kelawai Penang) (5 நட்சத்திர தங்கும் விடுதி)
முகவரி:
2 Persiaran Maktab,
10250 Penang,
Malaysia.
தொலைபேசி எண்: +604 219 0000
வலைத்தளம்: http://ghotelkelawai.com.my
ஜோர்ஜ் டவுன் சிட்டி ஹோட்டல் (Georgetown City Hotel) (4 நட்சத்திர தங்கும் விடுதி)
முகவரி:
1-Stop Midlands Park,
Burmah Road
10350 Georgetown,
Penang, Malaysia.
தொலைபேசி எண்: +604 227 7111
வலைத்தளம்: http://www.georgetowncityhotel.com
ஹோட்டல் வாட்டர்வோல் (Hotel Waterfall) (3 நட்சத்திர தங்கும் விடுதி)
முகவரி:
160 Jalan Utama,
10450 Penang,
Malaysia
தொலைபேசி எண்: +604 229 5588
வலைத்தளம்: http://www.hotelwaterfall.com.my
ஈப்போவில் தைப்பூசம்
பினாங்கு மற்றும் கோலாலம்பூரைக் காட்டிலும் ஈப்போவில் தைப்பூச திருவிழா சிறிய அளவில் ஆனால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. இங்கே பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இடைவிடாமல் 24 மணி நேரத்திற்கு இவ்விழாவைக் கொண்டாடுகிறார்கள். ஈப்போவின் இரத ஊர்வலம் மாரியம்மன் ஆலயத்தில் தொடங்கி அருள்மிகு கல்லுமலை சுப்ரமணியர் ஆலயத்தில் முடிவுறும்.
ஊர்வலம் செல்லும் பாதை எங்கும், மக்கள் பந்தல்கள் மற்றும் கடைகள் போட்டு பக்தர்களுக்குச் சிற்றுண்டிகள் வழங்குவார்கள். பக்தர்கள் பாடியும் ஆடியும் கொண்டாட்டத்தை மெருகேற்றுவார்கள்.
அருள்மிகு கல்லுமலை சுப்ரமணியர் ஆலயத்திற்கு செல்லும் வழி
பெருநாள் காலங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிரமமாக இருக்கும் என்பதால், கல்லுமலை அருள்மிகு சுப்ரமணியர் ஆலயத்திற்கு வாடகை வண்டியில் செல்லுமாறு ஆலோசனை கூறப்படுகின்றது.
அருள்மிகு கல்லுமலை சுப்ரமணியர் ஆலயம்
முகவரி:
Ipoh Hindu Devasathana Paripalana Sabah
No. 140, Jalan Raja Musa Aziz,
30300 Ipoh,
Perak, Malaysia.
தொலைபேசி எண்: +604 229 5588
வலைதளம்: http://www.hotelwaterfall.com.my
அருள்மிகு கல்லுமலை சுப்ரமணியர் ஆலயத்திற்கு அருகில் இருக்கும் தங்கும் விடுதிகள்
ஆலயத்திற்கு அருகில் உள்ள தங்கும் விடுதிகளின் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. இதைத் தவிர்த்து மற்ற தங்கும் விடுதிகளின் தகவல்களை நீங்கள் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.
சிட்டிடெல் எக்ஸ்பிரஸ் ஈப்போ (Cititel Express Ipoh)
முகவரி:
2 Jalan S. P. Seenivasagam
30000 Ipoh,
Perak, Malaysia.
தொலைபேசி எண்: +605 208 2888
வலைதளம்: http://www.cititelexpress.com/ipoh/
சீம்சூன் ஹோட்டல் (Seemson Hotel)
முகவரி:
No. 2 Regat Dato Mahmud,
Jalan Pasir Puteh
31650 Ipoh,
Perak, Malaysia.
தொலைபேசி எண்: +605 255 6888
வலைதளம்: http://www.seemsoonhotel.com
எம் போட்டிக் ஹோட்டல் ஈப்போ (M Boutique Hotel Ipoh)
முகவரி:
2 Hala Datuk 5,
Off Jalan Leong Boon Swee
31650 Ipoh,
Perak, Malaysia
தொலைபேசி எண்: +605 255 5566
வலைதளம்: http://www.mboutiquehotels.com
மலேசியா முழுதும் எடுக்கப்பட்ட தைப்பூச திருவிழாவின் படங்கள்
மேலும் பல சுவாரஸ்யமான இணைப்புகளுக்கு:
- Mount Kailash and more
- 24 Holy Places & Eight Great Charnel Grounds
- Gadhimai – A Holy Festival?
- Diwali Celebrations in India
- Beautiful Hindu Temples
- Emperor Ashoka the Great
- Aghori
- 74 Grand Statues of the World
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
மிகவும் நன்றி ரின்போச்சே தைப்பூசத்தின் மகிமையை விளக்கியதற்கு.நாங்கள் மலேசியாவில் இ௫ப்பதற்கு பெ௫மை கொள்கிறோம் .
மேலும் தெரிந்து கொள்ள
http://bit.ly/2lPvQUG