மலேசியாவில் சீனர்கள்
வரலாறு
மலாய்க்காரர்களுக்கு அடுத்து மலேசியாவின் இரண்டாவது பெரும்பான்மையான இனமாக சீன மக்கள் திகழ்கின்றனர். மலேசிய சீன வம்சாவளியினர், மின் சீனர்கள், யூ சீனர்கள், ஹக்கா சீனர்கள், வு சீனர்கள் மற்றும் வடக்கு சீனர்கள் என்று பல வகையான கிளை இனங்களுக்குள் அடங்குவர். 15-ஆம் நூற்றாண்டில் சீன இளவரசி, ஹங் லீ போ, மலாக்கா சுல்தானுக்கு மணமுடித்து வைக்கப்பட்டபோது முதலாம் அங்கீகரிக்கப்பட்ட சீன குடியிருப்பு அமைக்கப்பட்டது.
முதல் அலை – தளத்தகை உறவு
மலேசியாவில் சீனர்களின் வரலாறு, கடற்படை அதிகாரி ச்சேங் ஹோ என்றும் அறியப்படும், கடற்படை அதிகாரி செங் ஹேயின் (1371 – 1435) வருகையில் தொடங்கியது. செங் ஹே, நாடுகாண் பயணியும், காழ்கடிதல் செய்யப்பட்டவரும் மற்றும் சீன மிங் வம்சத்தின் பண்ணுறவாளரும் ஆவர். அவர் தன் வாழ்நாளில், மொத்தம் ஏழு கடற்பயணம் மேற்கொண்டார். அந்த பயணங்களின் போது அவர் 5 முறை மலாக்காவிற்கு வருகை புரிந்திருக்கின்றார்.
செங் ஹேயின் ராஜீய குறிப்பணிகளுக்கு அடுத்து, மலாக்கா பேரரசின் 6-ஆவது சுல்தான், மன்சூர் ஷா (1456 – 1477), மிங் வம்சத்தின் இளவரசி, ஹங் லீ போவுடன் அரசியல் திருமணமொன்றை 1459-இல் ஏற்பாடு செய்தார். சுல்தான் மன்சூர் ஷாவை மணந்து 5-ஆவது மனைவியாய் ஆகுவதற்கு முன், இளவரசி ஹங் லீ போ இஸ்லாம் மதத்திற்குத் தழுவினார். இளவரசி ஹங் லீ போ மலாக்காவிற்கு வரும் பொழுது தன்னுடன் ராஜ உதவியாளர்களை அழைத்து வந்தார்.
தனது புதிய மனைவிக்கும் அவரின் உதவியாளர்களுக்கும், தன் திருமண பரிசாக, சுல்தான் மன்சூர் ஷா, மலாக்காவில் உள்ள இடம் ஒன்றை வழங்கினார். அதற்கு புக்கிட் சீனா என்ற பெயர் வழங்கப்பட்டது. அப்பகுதியை மேம்படுத்துவதற்காக அங்கே ஒரு நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு பின்னாளில் அரச கிணறு என்று அறியப்பட்டதோடு அது அப்பகுதியில் வாழும் மக்களின் முக்கியமான நீர் மூலமாக ஆனது. 1677-இல், டச்சுக்காரர்கள் அக்கிணற்றைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பி அதனை வாழ்த்தும் கிணறாக மாற்றினர். இன்று, புக்கிட் சீனா 12,500 கல்லறைகள் கொண்டு, மலேசியாவின் மிகப்பெரிய சீன மயானங்களில் ஒன்றாக இருக்கின்றது. விந்தையாக, சீன நாட்டின் குறிப்புகளில், மிங் வம்சத்தில் ஹங் லீ போ என்ற இளவரசி வாழ்ந்ததாக ஒரு குறிப்பும் இல்லை. இளவரசி ஹங் லீ போ மிங் வம்சத்தின் பேரரசர் யோங்கிலின் நேரடி குடும்ப உறுப்பினராக இல்லாமல் அவரின் ராஜ குடும்பத்தின் உறுப்பினராக இருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.
பெரும்பாலான ஹங் லீ போவின் உதவியாளர்கள் சுல்தான் மன்சூர் ஷாவின் ஆண் உதவியாளர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்கள் மலாக்கா-சீனர் சந்ததியை உருவாக்கினர். இந்த சந்ததியின், புலம்பெயர்ந்த சீனர்களின் முதல் வகுப்பினர் (இவர்கள் சீன ஹோக்கியன் துணை இனத்தைச் சார்ந்தவர்கள்) 15-ஆம் மற்றும் 17-ஆம் நூற்றாண்டுகளில் மலேசியாவிற்கு வருகை புரிந்தனர். இவர்கள் பேரானக்கான் என்றறியப்படுகிறார்கள். அதன் கிளை மிகவும் பிரபலமான பாபா-ஞோஞாவாகும். ஆண்கள் பாபா என்றும் பெண்கள் ஞோஞா என்றும் அறியப்படுகின்றனர்.
இரண்டாம் அலை – நல்ல எதிர்காலத்தைத் தேடி
மலேசியாவிற்கான சீன புலம்பெயர்ந்தவர்களின் இரண்டாம் அலை 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பிரிட்டிஷ் காலனியின் போது வந்து சேர்ந்தனர். அந்த கால கட்டத்தில், நாடு இன்றைய மலேசியாவையும் சிங்கப்பூரையும் சேர்த்து பிரிட்டிஷ் மலாயாவாக அறியப்பட்டது. அக்கால கட்டத்தில், சீனா நெருக்கடியான எழுச்சிகளைச் சந்தித்துக் கொண்டிருந்தது. அது, முதலாம் அபினிப் போர் ( 1839 – 1842), இரண்டாம் அபினிப் போர் (1856 – 1860) ஆகியவற்றில் தோல்வி கண்டிருந்ததோடு சீன தேசியவாத கட்சிக்கும், கம்யூனிச கட்சிக்கும் இடையே போர் மூளும் அபாயமும் இருந்தது (1927 – 1950).
உள்ளூர் குழப்பங்கள் சீனாவை ஆழமான பொருளாதார வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றதால் அரசியல் சூழலில் நிலையற்ற நிலைமையும் வாழ்வதற்கு சிரமமான நிலைமையும் ஏற்பட்டு நிறைய சீனர்கள் இன்னும் நல்ல வாய்ப்புக்களைத் தேடி குடி பெயர்ந்தனர். அவற்றில் மிக பிரபலமான இடங்களில் ஒன்று பிரிட்டிஷ் மலாயா. பெரும்பாலான இரண்டாம் அலை சீன புலம்பெயர்ந்தவர்கள் ஃபுஜியான் மற்றும் குவான்டொங் மாகாணங்களைச் சார்ந்தவர்கள்.
மூன்றாம் அலை – வெளிநாட்டு துணைகள்
மூன்றாம் அலை மலேசியாவிற்குச் சீன புலம்பெயர்ப்பு, 1900-களில் நிகழ்ந்தது. ஆனால் இம்முறை குறைவான எண்ணிக்கையில், நிறைய பேர் ஏற்கனவே மலேசியாவில் குடிபெயர்ந்தவர்களின் துணைகளாக வந்தார்கள். பெரும்பாலானவர்கள், சீனாவின் வடதிசையிலிருந்து வந்ததோடு அவர்கள் மென்டரின் கிளைமொழி பேசுபவர்களாக இருந்தார்கள்.
மலேசியாவில் சீனர்களின் மக்கள் தொகை
மலேசியாவில் சீனர்கள், மலாய்க்காரர்களுக்கு அடுத்து இரண்டாவது அதிக எண்ணிக்கை கொண்ட இனமாகவும் இந்தியர்கள் நாட்டின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட இனமாகவும் வாழ்கின்றார்கள். மலேசியாவில் வாழும் 31 மில்லியன் மக்களில் ஏறக்குறைய 6.9 மில்லியன் (அல்லது 22.6%) சீன இனத்தைச் சார்ந்தவர்களாவார்கள். இவற்றில், சில கிளை இனங்களும் மற்றும் அவர்களின் குறிப்பிட்ட கிளைமொழிகள் உதாரணத்திற்கு ஹோக்கியன், கந்தோனிஸ், ஹக்கா மற்றும் தியோசியூ போன்றவைகளும் அடங்கும்.
மலேசியாவில் பல்வகையான சீன கிளைமொழிகள்
கிளைமொழி ஹோக்கியன்
மலேசியாவில் பேசப்படும் ஹோக்கியனில் இரண்டு விதங்கள் உண்டு : பினாங்கு ஹோக்கியன் மற்றும் தெற்கு மலேசியா ஹோக்கியன். பினாங்கு ஹோக்கியன் , சீனாவிலுள்ள சாங்சோ பட்டணத்திலிருந்து தோன்றியதோடு அதில் மலாய் மற்றும் ஆங்கில வார்த்தைகளின் பயன்பாடு சேர்க்கப்பட்டிருக்கின்றது. தெற்கு மலேசிய ஹோக்கியன், சீனாவின் குவான்சோ பட்டணத்திலுள்ள மக்களால் பேசப்படும் கிளைமொழியை அடிப்படையாகக் கொண்டது.
கந்தோனிஸ் கிளைமொழி
கந்தோனிஸ் கிளைமொழி, தெற்கு சீனாவின் குவாங்சோ பகுதியில் தோன்றிய சீன மொழியிலிருந்து மாறுபட்டது. கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா, சுபாங் ஜெயா, சிரம்பான், ஈப்போ, கம்பார் மற்றும் குவாந்தன் போன்ற தீபகற்ப மலேசியாவின் மத்திய பகுதியில் வாழும் மலேசிய சீனர்களால் கந்தோனிஸ் பேசப்படுகின்றது. அதோடு, கந்தோனிஸ், சபாவில் உள்ள சண்டாக்கான் மாவட்டத்தில் மற்றும் ஜோகூரில் உள்ள மெர்சிங் மாவட்டத்தில் பெரும்பாலும் பேசப்படுகின்றது.
ஹக்கா மற்றும் தியோசியூ கிளைமொழிகள்
ஹக்கா கிளைமொழி மென்டரின் மொழியைக் காட்டிலும் கன் மொழியுடன் ஒத்து போகின்றது. சபாவில் கோத்தா பேலுட், கோத்தா கினபாலு, பாபார், மருடு, குனா, லாஹாட் டத்தோ, செப்போர்னா மற்றும் இன்னும் பல இடங்களில் ஹக்கா மலேசிய சீனர்களால் பேசப்படுகின்றது. தியோசியூ, கிழக்கு குவான்டொங்கில் இருந்து தோன்றி வந்ததோடு இது ஜோகூர் மாநிலத்தின் தலைநகரமான ஜோகூர் பாருவில் வாழும் பெரும்பாலான மலேசிய சீனர்களால் பேசப்படுகின்றது.
மலேசிய சீனர்களின் மதங்கள்
ஏறத்தாழ 86% மலேசிய சீனர்கள் முன்னோர்கள் வழிபாடு, மகாயானா புத்த மதம் மற்றும் கன்பூசியம் தத்துவதத்தின் தாக்கத்துடன் தங்களின் தினசரி வாழ்க்கையை வாழ்கின்றார்கள். 11% சீனர்கள் கிறிஸ்துவர்களாகவும் மீதமுள்ளவர்கள் நாத்திகர்களாக, முஸ்லிம்களாக. இந்துக்களாக அல்லது மற்ற நம்பிக்கையைச் சார்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.
உள்ளூர் மலேசிய கலாச்சாரத்தில் சீனர்களின் தாக்கம்
கட்டடக் கலை
மலேசியாவில் சீன கட்டடக் கலை, சீன பாரம்பரியம் மற்றும் பாபா ஞோஞா ஆகிய இரண்டு வகைகளில் அடங்கும்.
சீன பாரம்பரிய கட்டடக் கலை
சீன பாரம்பரிய கட்டடக் கலை, சமச்சீர், திறந்த வெளி தோட்டம், முக்கியத்துவ படிநிலை அடிப்படையாகக் கொண்ட வடிவம், கிடையான அழுத்தம் மற்றும் அகிலவியல் கோட்பாடுகளைக் கடைபிடித்தல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றது., கட்டடத்தைச் சுற்றியுள்ள காலி இடங்களை ஒன்றுகொன்றுடன் நேரடியாகவோ அல்லது வராண்டாக்கள் மூலமோ இணைத்து, சீன பாரம்பரிய கட்டடம் சமச்சீர் மற்றும் சமநிலையைப் பராமரிக்கின்றது. முக்கியத்துவ படிநிலையும் சீன பாரம்பரிய கட்டடத்தில் முக்கியமானது மற்றும் அது கட்டடங்களின் இடநிலை மற்றும் கதவுகளின் இடநிலையில் காட்டப்படுகின்றது.
உதாரணத்திற்கு, முன்பகுதியைப் பார்த்த வண்ணம் உள்ள கட்டடம் பக்கவாட்டை நோக்கிய வண்ணம் உள்ள கட்டடத்தை விட முக்கியமானது. அதோடு, ஒரு சீன பாரம்பரிய கட்டடம், சீன அகிலவியல் தத்துவங்களைப் பின்பற்ற வேண்டும் உதாரணத்திற்கு, அதிர்ஷ்டத்திற்கும் வளமைக்கும், பெங் சுயி மற்றும் தவோயியம் குறியீடுகளான பழங்கள் அல்லது மூன்று கால் கொண்ட தவளை ஆகியவற்றை பயன்படுத்துவார்கள். மலேசியாவில் பாரம்பரிய சீன கட்டக்கலைக்கு ஒத்துப்போகும் சில கட்டடங்கள் கீழே :
தியான் ஹோ ஆலயம்
செங் ஹோன் தேங் ஆலயம்
சியான் சி ஷே யீ ஆலயம்
பாபா ஞோஞா கட்டடக்கலை
நூற்றாண்டுகளாக, பேரனக்கான் கலாச்சாரம் தனது சொந்த தனித்துவமான கட்டடக்கலையை உருவாக்கிக் கொண்டுள்ளது. அதில் ஒரு விதம், விருந்து மண்டபம், முன்னோர்கள் மண்டபம், சாதாரணமான படுக்கை அறைகள், மணமகள் அறை மற்றும் சமையலறை கொண்டதாகும். மற்றுமொரு தனித்துவமான அம்சங்கள், வண்ணமயமான தரை மற்றும் நல்ல காற்றோட்டத்திற்கும் இயற்கையான வெளிச்சம் வருவதற்கும் மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும் வீட்டின் நடுவில் முற்றம் வைத்தல் போன்றவையாகும். பாபா ஞோஞா கட்டடக்கலை என்றழைக்கப்படும் இந்த மாதிரியான கட்டடக்கலையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, நீங்கள் மலாக்காவில் உள்ள பாபா ஞோஞா பாரம்பரிய அரும்பொருட்காட்சி சாலைக்கு வருகை புரியலாம். மலாக்கா மாநிலம் உலக யுனெஸ்கோ பாரம்பரிய களமாக 2008-ல் அங்கீகரிக்கப்பட்டது.
மலேசிய சீனர்களின் பண்டிகைகள்
சீனப் புத்தாண்டு
சீனப் புத்தாண்டு சீனர்களின் லூனார் நாட்காட்டி துவங்குவதைக் குறிக்கின்றது. இந்த பெருநாள் உலகில் வாழும் சீனர்களால் அதிகமாகக் கொண்டாடப்படும் பெருநாள் என்று நம்பப்படுகின்றது. இது பெரும்பாலும் ஆங்கில நாட்காட்டிப்படி ஜனவரி 21-ற்கும் பிப்ரவரி 20-க்கும் இடையில் கொண்டாடப்படுகின்றது.
கிங்மிங் பெருநாள்
கிங்மிங் பெருநாள் மலேசிய சீனர்கள் தங்களின் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்களின் கல்லறைகளைச் சுத்தப்படுத்தி தங்களின் மரியாதையைச் செலுத்த கொண்டாடப்படுகின்றது. இப்பெருநாள் பெரும்பாலும் சீன லூனார் நாட்காட்டியின் படி இளவேனிற் சம இரவு நாளுக்குப் பின் வரும் 15-ஆவது நாளன்று கொண்டாடப்படும்.
நடு இலையுதிர் கால திருவிழா
நடு இலையுதிர் கால திருவிழா சீன லூனார் நாட்காடியின்படி 8-ஆவது மாதத்தில் 15-ஆவது இரவினில் கொண்டாடப்படுகின்றது. நிலா பெருநாள் என்றும் அறியப்படும் இப்பெருநாள் பெளர்ணமியையும் குறிக்கின்றது. மக்கள் தனது குடும்பத்தினருடன் பெளர்ணமியின் ஒளியினை ரசித்துக் கொண்டே ‘மூன் கேக’ உண்டு இப்பெருநாளைக் கொண்டாடுவார்கள்.
டிராகன் படகு திருவிழா
டுவாவூ திருவிழா என்றும் அறியப்படும் டிராகன் படகு திருவிழா, 278 கிமுவில் ஊழல் அரசாங்கத்தின் மீது தன்னுடைய அதிருப்தியைக் காண்பிக்க வீரமாக தானே மூழ்கி மரணமடைந்த வரலாறு சிறப்புமிக்க சீன அறிஞர் க்யூ யுவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடத்தப்படுகின்றது. மீனவர்கள் தங்களின் படகுகளில் அவருடைய உடலை தேடிச் சென்றதோடு மீன்கள் க்யூ யுவனின் உடலை உண்ணாமல் இருப்பதற்கு சோறு உருண்டைகளை நீருக்குள் வீசியதாகவும் பழங்கதைகள் கூறுகின்றது. டிராகன் படகு திருவிழா சீன லூனார் நாட்காட்டியின்படி 5-ஆவது மாதத்தில் 5-ஆவது நாளன்று கொண்டாடப்படுகின்றது.
விசாக தினம்
விசாக தினம், சீன லூனார் நாட்காட்டியில் 4-ஆவது மாதத்தில் பெளர்ணமியன்று கொண்டாடப்படுகின்றது. இந்த கொண்டாட்டம், சாக்கியமுனி புத்தரின் பிறப்பு, ஞானம் அடைந்தது மற்றும் அவரின் நிர்வாண மோட்சத்தைக் அனுசரிக்கின்றது. அன்று புத்த மதத்தினர் புத்த பிக்குகளுக்குக் காணிக்கைகள் செலுத்துவார்கள், தங்கள் பூஜையறைகளை பூக்களாலும் விளக்குகளாலும் அலங்கரிப்பார்கள் மற்றும் அசைவ உணவைச் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுவார்கள்.
சீன பாரம்பரியிலிருந்து மிகப் பிரபலமானவர்கள்
வரலாற்று பிரபலங்கள்
கபிதான் சீனா சுங் கேங் குயீ (1821 – 1901)
சுங் கேங் குயீ, சீனாவிலுள்ள குவான்டொங்கில் செங் ஷேங் மாவட்டத்தில் சின் சுன் விலாவில் ஹக்கா விவசாயி குடும்பத்தில் பிறந்தார். அவர் 1841-இல் பிரிட்டீஷ் மலாயாவிற்குத் தனது தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற தனது தந்தையையும் தம்பியையும் தேடி வந்தார்.அவர் மிகவும் புகழ்பெற்ற கோடீஸ்வர கொடையாளியாக திகழ்ந்தார்; ஈய சுரங்கத் தொழில்துறையில் கண்டுபிடிப்பாளராகவும் மற்றும் ஹய் சான் என்றழைக்கப்பட்ட பிரிட்டீஷ் மலாயாவின் சீன ரகசிய சமூகத்தின் தலைவராகவும் திகழ்ந்தார்.
அதன் பின், அவர் பேராக்கில் தைப்பிங் பட்டணத்தைத் தோற்றுவித்து அதனை நிர்வாகம் செய்தார். அவர், 1877-இல், தென்கிழக்காசியாவில் சீன சமூகத்துத் தலைவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘கபிதான் சீனா’-வாக பிரிட்டீஷ்ஷால் நியமிக்கப்பட்டார்.
கபிதான் சீனா யாப் ஆ லோய் (1837 – 1885)
யாப் ஆ லோய், குவான்டோங், சீனாவில் ஒரு ஹாக்கா சீன குடும்பத்தில் மார்ச் 14, 1837-இல் பிறந்தார். 1854-இல், யாப் ஆ லோய், மாக்காவு வழி பிரிட்டீஷ் மலாயாவிற்கு வந்தார். அவர் ஈய சுரங்கத்திலும் சிறு அளவு வணிகராகவும் வேலை புரிந்தார். அவரின் நல்ல நண்பர், லியு கிம் கோங், 1862-ஆம் ஆண்டில் கோலாலம்பூரின் இரண்டாவது கபிதான் சீனாவாக வந்தார். லியு கிம் கோங்கிற்கு யாப் ஆ லோய் நம்பிக்கமிகுந்தவராக பணிபுரிந்ததோடு பின்னர் மூன்றாவது கோலாலம்பூரின் சீன கபிதானாக பதவி ஏற்று சீன குடியிருப்பினரை மேல்பார்வை பார்த்தார். அவரின், ஆட்சியின் போது, 1867-லிருந்து 1873- வரை அவர் சிலாங்கூர் உள்நாட்டுப் போரில் உள்ளூர் ஆட்சியாளர் துங்கு குடினை ஆதரித்தார். அதோடு அவர் பல்வேறு விருப்பம் கொண்டதோடு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தைத் தன் வசம் திரட்டியும் கொண்டார். யாப் ஆ லோய், பிரிக்ஃபில்ஸ் போன்ற கோலாலம்பூரில் உள்ள நவீன இடங்களை மேம்படுத்தியதற்காக பெரிதும் பாரட்டப்பட்டவர்.
வணிக பிரபலங்கள்
டத்துக் ஜிம்மி சோ
டத்துக் ஜிம்மி சோ, லண்டனில் வசிக்கும் மலேசிய சீன வடிவமைப்பாளர். அவர், ஜிம்மி சோ என்று தனது பெயரை வர்த்தக குறியாக கொண்ட கையால் பின்னப்படும் காலணிகளுக்கு மிகவும் பிரசித்திப் பெற்றவர். ஜிம்மி சோ, நவம்பர் 15, 1948-இல் ஜோர்ஜ் டவுன், பினாங்கில் காலணி செய்யும் வணிகத்தைத் தொழிலாகக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார். வடிவ துறையில் அனுபவம் மிக்கவரான, ஜிம்மி சோ, 2011-இல் உலகின் தலைசிறந்த மலேசிய வடிவமைப்பாளர் விருது, 2012-இல் ‘நீங்கள் உலகிற்கு அழகு சேர்க்கின்றீர்கள் விருது’ போன்ற பல வகையான விருதுகளை வென்றிருக்கின்றார்.
சாங் தோய்
சாங் தோய் மலேசியாவின் திறமையான வடிவமைப்பாளர். அவர் மோட்டன்-கேடேட் இளம் வடிவமைப்பாளர் விருது மற்றும் நியு யோர்க்கில் தி இன்டர்னேஷனல் பெரும் திறமை விருது போன்ற பல்வேறு விருதுகளை பெற்றிருக்கின்றார். சாங் தோயின் வடிவமைப்பு, நோட்சோத்ரோம் போன்ற அனைத்துலக உயர்தர கடைகளில் மற்றும் மலேசியாவில் சாங் தோய் கடைகளில் கிடைக்கும்.
தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வின்சென்ட் தான் சீ யுன்
தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ வின்சென்ட் தான் சீ யுன், 1952-ஆம் ஆண்டு பிறந்த சுயமுற்சியில் உயர்ந்த மலேசிய சீன தொழிலதிபர் ஆவர். வின்சென்ட் தான், கோல்ப், நிலபுலம், பொழுது போக்கு இடங்கள் மற்றும் சூதாட்டங்கள் போன்வற்றின் கூட்டுத்தாபனமாக விளங்கும் பல பில்லியன் மதிப்பிலான நிறுவனம் பெர்ஜாயா கோர்ப்பின் தலைவராவார். ஃபோம்ஸ் நாளிதழின்படி, வின்சென்ட் தான் 2016-இல் மலேசியாவின் 17-ஆவது பணக்காரராவார்.
கலை மற்றும் கேளிக்கை
அம்பேர் சியா
அம்பேர் சியா, மலேசியாவின் மாடல் மற்றும் நடிகையாவார். அவர், தெலுக் இந்தான், மலேசியாவில் டிசம்பர் 14, 1981-இல் பிறந்தார். ஃபேசன் துறையில், அவரின் குறிப்பிடத்தக்க சாதனை எதுவெனில், ‘2004 கெஸ் வாச்சஸ் டைம்லெஸ் பியுட்டி இன்டர்நேஷனல் மாடல் சேர்ச்’ போட்டியில் வென்றதாகும். அதன்பின், அவரின் தொழில் வளர்ச்சி கண்டதோடு அவர் நட்சத்திர அந்தஸ்த்தையும் பெற்றார். அவரின் அண்மைய சாதனை எதுவென்றால் அம்பேர் சியா அகாடமி என்ற தனது சொந்த மாடலிங் மற்றும் அழகு பள்ளிக்கூடம் ஒன்றை அமைத்தது ஆகும்.
தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ மிஷேல் யூ சூ-கேங்
மிஷேல் யூ என்றும் அறியப்படும் தான் ஸ்ரீ டத்தோ ஸ்ரீ மிஷேல் யூ சூ-கேங், ஹோக்கியன் வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பிரபலமான நடிகையாவார். அவர் ஆகஸ்ட் மாதம் 6, 1962-இல், ஈப்போ மலேசியாவில் பிறந்தார். மிஸ் மலேசியா அழகுராணிப் போட்டியின் வெற்றியாளர் என்பதோடு, மிஷேல் யூ தனது தொழிலின் ஆரம்ப கால கட்டத்தில் ஜாக்கி சான்னுடன் நடிக்கும் பொழுது தனது சொந்த சண்டை வித்தைகளைச் செய்ததற்காகவும் பிரபலம் அடைந்தார். 1997-இல் மிஷேல் யூ, பீப்பல் நாளிதழின் “உலகின் 50 மிக அழகானவர்கள்” பட்டியலில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு “35 என்றென்றும் திரை அழகிகள்” பட்டியலில் அதே நாளிதழால் அழகும் தைரியமும் கலந்த அவரின் தனித்துவத்தினால் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஃபிஷ் லியோங்
ஃபிஷ் லியோங், கந்தோனிஸ் வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய சீன பாடகர். அவர் நெகிரி செம்பிலானில் ஜூன் 16, 1978-இல் பிறந்தார். அவர், தைவான், சீனா, ஹோங் கோங், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வெற்றியைப் பெற்றிருந்தார். அவர் தனது காதல் பாடல்களுக்கு மிகவும் பெயர் போனவர்.
விளையாட்டு பிரபலங்கள்
டத்தோ லீ சோங் வெய் DSPN DB DCSM
டத்தோ லீ சோங் வெய் DSPN DB DCSM அக்டோபர் 21, 1982-இல், பாகான் செராய், பேராக்கில் பிறந்த மலேசிய சீன பேட்மிட்டன் விளையாட்டாளர் ஆவார். மலேசிய போட்டி விளையாட்டாளராய் அவரின் அசாதாரணமான சாதனைகளுக்காக மலேசிய பிரதமர் நஜிப் துன் ராசாக், அவரை தேசிய ஹீரோ என்று குறிப்பிட்டிருக்கின்றார். அவர் உலகின் முதல் நிலை பேட்மிண்டன் விளையாட்டாளராய் ஆகஸ்ட் 21, 2008-லிருந்து ஜூன் 14, 2012-வரை தொடர்ச்சியாக 139 வாரங்களுக்கு இருந்தார்.
சீயோங் ஜுன் ஹூங்
சீயோங் ஜுன் ஹூங், மலேசிய சீன முக்குளிப்பவர். 2016-ஆம் ஆண்டில், ரியோ டி ஜனெரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் 10மீ ஒருகிணைந்த முக்குளிப்பு போட்டியில் பண்டேலேலா ரினோங்குடன் சேர்ந்து வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இணை பெண்மணி இவராவார்.
மேலும் பல சுவாரஸ்யமான இணைப்புகளுக்கு:
- Dhaneshwar Bhagawan Dorje Shugden | धनेश्वर भगवान दोर्जी शुगदेन। | தனேஷ்வரர் பகவான் டோர்ஜே ஷுக்டேன் | धनेश्वर भगवान दोर्जे शुग्देन। | རྡོ་རྗེ་ཤུགས་ལྡན།
- தைப்பூசம் – முருகப்பெருமானின் விழா
- நாவில் சுவையூறும் 25 வகையான மலேசிய உணவுகள்
- மலேஷியா பாரம்பரிய ஆடைகள்
- டிராகன் படகு திருவிழா: பாரம்பரிய மற்றும் நவீன கலாச்சாரத்தின் இணைவு
- குவான் யின் நாள்
- மலேசியாவில் முடியாட்சி முறை
- மலேசியாவில் இந்தியர்கள்
- டோர்ஜே ஷுக்டேன் அவர்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வோம்! (ஆங்கிலம், திபெத், சீனம், ஹிந்தி, தமிழ் மற்றும் நேபாளம்)
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
மலேசியாவில் சீனர்கள், மலாய்க்காரர்களுக்கு அடுத்து இரண்டாவது அதிக எண்ணிக்கை கொண்ட இனமாகவும் இந்தியர்கள் நாட்டின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட இனமாகவும் வாழ்கின்றார்கள். மலேசியாவில் வாழும் இ௫ப்பத்தொன்று மில்லியன் மக்களில் ஏறக்குறைய நான்கு மில்லியன் (அல்லது 22.6%) சீன இனத்தைச் சார்ந்தவர்களாவார்கள். இவற்றில், சில கிளை இனங்களும் மற்றும் அவர்களின் குறிப்பிட்ட கிளைமொழிகள் உதாரணத்திற்கு ஹோக்கியன், கந்தோனிஸ், ஹக்கா மற்றும் தியோசியூ போன்றவைகளும் அடங்கும்.