மலேசியாவில் முடியாட்சி முறை
உலகம் முழுவதும் உள்ள அன்பர்களே,
நான் கடந்த 20 ஆண்டுகளாக மலேசிய நாட்டில் வாழ்ந்து வருகின்றேன். என்னுடைய இந்த காலகட்டத்தில், நான் மலேசிய நாட்டில் உள்ள அனைத்து பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரங்கள் மீதும் மிகுந்த மரியாதையும் புரிந்துணர்வையும் செலுத்தி வந்துள்ளேன். இந்த புரிதலே, என்னை மலேசிய நாட்டினைப் பற்றி மேலும் எழுதுவதற்கு தூண்டுகோளாக அமைந்துள்ளது. மலேசியா வின் பின்னணிகளைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள இதோ சுவாரஸ்யமான பல தகவல்கள்.
மலேசிய அரசியலமைப்பு முடியாட்சி முறையை கொண்டுள்ளது. அது பரம்பரை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முடியாட்சி முறையின் கலவையாகும். ஒன்பது மாநிலங்களில் முடியாட்சி முறையும், நான்கு மாநிலங்களில் மாநில ஆளுநர் தலைவராகவும் மற்றும் மீதமுள்ள மூன்று கூட்டரசு பிரதேசங்களை மத்திய அரசு நேரடியாகவும் நிர்வாகம் செய்கிறது.
இந்த கட்டுரையின் நோக்கம், நம் மாட்சிமை தங்கிய பேரரசரின் கீழ் இயங்கும் ஆட்சி முறையை ஆய்வு செய்வது ஆகும். மேலும் பரம்பரை அல்லது தேர்தல்வழி தேர்ந்தெடுக்கப்படும் முடியாட்சி முறை கீழ் ஆட்சி செய்யப்படும் ஒன்பது மாநிலங்களின் மீதும் நாம் கவனம் செலுத்த உள்ளோம். அந்த ஒன்பது மாநிலங்கள்:
- ஜொகூர் டாருல் தக்சிம்
- கெடா டாருல் அமான்
- கிளந்தான் டாருல் நைம்
- நெகிரி செம்பிலான் டாருல் குசுஸ்
- பகாங் டாருல் மக்முர்
- பேராக் டாருல் ரிட்சுவன்
- பெர்லிஸ் இந்திரா கயாங்கன்
- சிலாங்கூர் டாருல் ஏசான்
- திரங்கானு டாருல் இமான்
மலேசிய நாட்டின் முடியாட்சி முறையையும், அதன் வரலாற்று கூற்றுகளையும், மேலும் இவ்வகையான தனித்துவமான முறையை பல ஆண்டுகளாக எவ்வாறு செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும் உங்களுக்கு வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். மலேசிய நாட்டின் ஆட்சியாளர்களின் மற்றும் ஆட்சிமுறையின் மீதும் மிகுந்த மதிப்புடன் இவற்றை நான் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்.
திசெம் ரின்போச்சே
கண்ணோட்டம்
மலேசியா விலுள்ள பல மலாய் அரசாட்சிகள் முந்தைய காலத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழும் காலனித்துவ பகுதிகளாகவும் திகழ்ந்தன. 1946-ஆம் ஆண்டிற்கும் 1948-ஆம் ஆண்டிற்கும் இடையில், மலாயா ஒன்றிய அமைப்பை (மலாயன் யூனியன்) உருவாக்குவதில் தோல்வி கண்டதால், பிரிட்டிஷ் நிர்வாகிகள், மலாயா கூட்டமைப்பை 1948-ஆம் ஆண்டு நிறுவினர். அதில் மலாய் ஆட்சியாளர்களின் உரிமைகள் மற்றும் அடையாள அந்தஸ்துகள் அங்கீகரிக்கப்பட்டன.
மலாயா கூட்டமைப்பு ஒன்பது மலாய் அரசாட்சிகளை உள்ளடக்கியது ஆகும். அவை ஜொகூர், கெடா, கிளந்தான், நெகிரி செம்பிலான், பேராக், பெர்லிஸ், சிலாங்கூர், திரங்கானு, மற்றும் இரண்டு பிரிட்டிஷ் காலனித்துவ பிரதேசங்களான பினாங்கு மற்றும் மலாக்கா ஆகும். பிரிட்டிஷ் உயர் ஆணையாளரான ஒரு மூத்த பிரிட்டிஷ் தூதர் ஒரு காமன்வெல்த் பகுதிக்கு பொறுப்பு ஏற்று, மலாயா ஒன்றியத்திற்கு தலைமை வகித்தார். அவருக்கு நிர்வாக குழு மற்றும் சட்டமன்ற மேலவை உதவி செய்தன.
31-ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1957-ல், பிரிட்டிஷ் பேரரசுவிடமிருந்து சுதந்திரம் அடைந்ததை மலாயா ஒன்றியம் அறிவித்தது. 16-ஆம் திகதி செப்டம்பர் மாதம் 1963 முதல் மலாயா ஒன்றியம், மலேசியா என அங்கீகரிக்கப்பட்டது. மலேசியாவின் உறுப்பினர்களாக, முன்னாள் உறுப்பினர்களான மலாயா கூட்டமைப்பும் புதிய உறுப்பினர்களான வட போர்னியோ, சபா, சரவாக் மற்றும் சிங்கப்பூர் ஆகியவையும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு பிறகு சிங்கப்பூர் இந்த கூட்டணியிலிருந்து விலகிக் கொண்டது.
மலேசிய மாநிலங்களின் பட்டியல்:
எண் | மாநிலம் | தலை நகரம் | மாநிலத் தலைவர் |
1. | ஜொகூர் டாருல் தக்சிம் (ஜொகூர்) | ஜொகூர் பாரு | சுல்தான் |
2. | கெடா டாருல் அமான் (கெடா) | அலோர் ஸ்டார் | சுல்தான் |
3. | கிளந்தான் டாருல் நைம் (கிளந்தான்) | கோத்தா பாரு | சுல்தான் |
4. | மலாக்கா | மலாக்கா பட்டிணம் | யாங் டி பெர்துவ நெகிரி (கவர்னர்) |
5. | நெகிரி செம்பிலான் டாருல் குசுஸ் (நெகிரி செம்பிலான்) | சிரம்பான் | யாம் துவான் பெசார் (யாங் டி பெர்துவான் பெசார்) |
6. | பகாங் டாருல் மக்முர் (பகாங்) | குவந்தான் | சுல்தான் |
7. | பினாங்கு | ஜோர்ஜ் டவுன் | யாங் டி பெர்துவ நெகிரி (கவர்னர்) |
8. | பேராக் டாருல் ரிட்சுவன் (பேராக்) | ஈப்போ | சுல்தான் |
9. | பெர்லிஸ் இந்திரா கயாங்கன் (பெர்லிஸ்) | கங்கார் | ராஜா |
10. | சபா | கோத்தா கினபாலு | யாங் டி பெர்துவ நெகிரி (கவர்னர்) |
11. | சரவாக் | கூச்சிங் | யாங் டி பெர்துவ நெகிரி (கவர்னர்) |
12. | சிலாங்கூர் டாருல் ஏசான் (சிலாங்கூர்) | ஷா ஆலாம் | சுல்தான் |
13. | திரங்கானு டாருல் இமான் (திரங்கானு) | கோலா திரங்கானு | சுல்தான் |
குறிப்பு: இந்த கட்டுரையின் நோக்கம், நம் மாட்சிமை தங்கிய பேரரசரின் கீழ் இயங்கும் ஆட்சி முறையையும், அரசியலமைப்பு முடியாட்சி கொண்ட மாநிலங்களையும் (ஜொகூர், கெடா, கிளந்தான், நெகிரி செம்பிலான், பகாங், பேராக், பெர்லிஸ், சிலாங்கூர் மற்றும் திரங்கானு) ஆய்வு செய்வது ஆகும்.
மாட்சிமை தங்கி பேரரசர்
சுருக்கமான வரலாறு
1957-ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து மலேசியா சுதந்திரம் பெற்றவுடன், மாட்சிமை தங்கிய பேரரசரின் ஆட்சி நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்டது. மலேசிய நாட்டின் தலைவர் மாட்சிமை தங்கிய பேரரசர் ஆவார். அவரை ராஜ சபை (ஆட்சியாளர் மாநாடு) தேர்ந்தெடுக்கும். ஆட்சியாளர் மாநாடு உறுப்பினர்கள், அரசியலமைப்பு சட்ட திட்டங்கள் குறிப்பாக ஆட்சியாளர்களின் அந்தஸ்து, உள்நாட்டு குடிமக்களின் உரிமைகள், தேசிய மொழி மற்றும் முக்கிய கொள்கைகள் ஆகியவற்றை திருத்தம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆட்சியாளர் மாநாடு தேர்ந்தெடுத்த முதல் மாட்சிமை தங்கிய பேரரசர், ஜொகூரைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் (1873-1959; 1895-1959) ஆவார். இருப்பினும், முதுமை காரணமாக, 84 வயதான அவர், அந்த பதவியை மறுத்தார். அதன்பின், ஆட்சியாளர் மாநாடு, நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த துவாங்கு அப்துல் ரஹ்மான் (1895-1960; 1933-1960) அவர்களை முதல் மாட்சிமை தங்கிய பேரரசராக தேர்ந்தெடுத்தது.
தேர்தல் செயல்முறை
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது மரண சம்பவம் அல்லது மற்ற காரணங்களுக்காக அப்பதவி காலியாகும் போது, யார் மாட்சிமை தங்கிய பேரரசராக ஆட்சி செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை இந்த ஆட்சியாளர் மாநாடு வகிக்கின்றது. நான்கு மாநிலங்களின் கவர்னர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வர். ஆனால் அவர்களுக்கு ஓட்டுரிமையும் மாட்சிமை தங்கிய பேரரசராக பதவி வகிக்கவும் உரிமை கிடையாது.
மாட்சிமை தங்கிய பேரரசருக்கான வேட்பாளர்கள் அந்த பதவி வகிப்பதற்கு தேவையான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- வேட்பாளர் மலேசிய நாட்டின் மாநிலங்களின் சுல்தான்களாக இருத்தல் வேண்டும்
- வேட்பாளர் தக்க வயதை அடைந்திருக்க வேண்டும்
- வேட்பாளர், மாட்சிமை தங்கிய பேரரசர் ஆட்சி நிர்வாக தேர்தல் வாக்கெடுப்பில் போட்டியிட விருப்பம் கொள்ளவில்லை என முன்னதாக ஆட்சி முத்திரை காப்பாளரிடம் தெரியப்படுத்தாமல் இருத்தல் வேண்டும்
- ஆட்சியாளர் மாநாடு, ஏதாவது சில நியாயமான காரணங்களுக்காக, இந்த வேட்பாளரால், மாட்சிமை தங்கிய பேரரசருக்கான கடமைகளை நிறைவேற்ற முடியாது என்று மறுப்பு கூறாமல் இருத்தல் வேண்டும்
தேர்தல் நடைபெறும் பொழுது, ஆட்சி முத்திரை காப்பாளர் ஒரு வேட்பாளரின் பெயருள்ள ஒரு வாக்குச்சீட்டை கொடுப்பார். ஒவ்வொரு ஆட்சியாளரும் வாக்குச்சீட்டில் உள்ள வேட்பாளர் மாட்சிமை தங்கிய பேரரசரின் பதவிக்கு பொருத்தமானவரா என்பதை குறிப்பிட வேண்டும். ஆட்சி முத்திரை காப்பாளர் மற்றும் தேர்தலில் போட்டியிடாத மிக இளமையான ஆட்சியாளரும் சேர்ந்து வாக்குச்சீட்டுகளை எண்ணுவர். குறைந்தது ஐந்து வாக்குகள் பெற்ற வேட்பாளருக்கே மாட்சிமை தங்கிய பேரரசரின் பதவி வழங்கப்படும்.
வேட்பாளர் அந்த பதவியை வேண்டாமென மறுத்தால் அல்லது பெரும்பான்மை வாக்குச்சீட்டுகளை தக்க வைத்துக் கொள்ள தவறி விட்டால், பட்டியலில் இருக்கும் அடுத்த மூத்த ஆட்சியாளரை வேட்பாளராக்கி தேர்தல் செயல்முறை திரும்ப தொடரும்.
வரிசைப்படி மூத்த ஆட்சியாளர்களின் பட்டியல்:
- நெகிரி செம்பிலானின் யாம் துவான் பெசார்
- சிலாங்கூர் சுல்தான்
- பெர்லிஸ் அரசர்
- திரங்கானு சுல்தான்
- கெடா சுல்தான்
- கிளந்தான் சுல்தான்
- பகாங் சுல்தான்
- ஜொகூர் சுல்தான்
- பேராக் சுல்தான்
மாட்சிமை தங்கிய பேரரசர் தேர்வு செய்யப்பட்டதும், அவரின் இஸ்லாமிய தலைவர் என்ற பதவியைத் தவிர்த்து மற்ற தனது சொந்த மாநில பொறுப்புகளைச் செய்வதற்கு உதவியாக பிரநிதி ஒருவரை அலுவலக பொறுப்பாளர் நியமனம் செய்வார். மாட்சிமை தங்கிய பேரரசர் தனது சொந்த மாநிலத்தின் இஸ்லாமிய தலைவராக இருக்கும் உரிமையைத் தக்க வைத்துக் கொள்வார்.
மலேசியாவின் மாட்சிமை தங்கிய பேரரசர்களின் பட்டியல்:
எண் | பெயர் | காலம் | மாநிலம் |
1. | துவாங்கு அப்துல் ரஹ்மான் | 1957-1960 | நெகிரி செம்பிலான் |
2. | சுல்தான் ஹிஷாமுடின் அலாம் ஷா | 1960 | சிலாங்கூர் |
3. | ராஜா ஷேட் புத்ரா | 1960-1965 | பெர்லிஸ் |
4. | சுல்தான் இஸ்மாயில் நசிரூடின் ஷா | 1965-1970 | திரங்கானு |
5. | துவாங்கு அப்துல் ஹலீம் முவாட்ஸாம் ஷா | 1970-1975 | கெடா |
6. | சுல்தான் யாயா பெட்ரா | 1975-1979 | கிளந்தான் |
7. | சுல்தான் ஹஜி அகமது ஷா அல்-முஸ்தாய்ன் பில்லா | 1979-1984 | பகாங் |
8. | சுல்தான் இஸ்கன்டார் | 1984-1989 | ஜொகூர் |
9. | சுல்தான் அஸ்லான் முஹிபுடின் ஷா | 1989-1994 | பேராக் |
10. | துவாங்கு ஜாபார் | 1994-1999 | நெகிரி செம்பிலான் |
11. | சுல்தான் சலாஹுடின் அப்துல் அஸிஸ் ஷா | 1999-2001 | சிலாங்கூர் |
12. | பெர்லிஸின் ராஜா சிராஜுடின் | 2001-2006 | பெர்லிஸ் |
13. | திரங்கானுவின் மிஸான் ஸைனால் அபிடின் | 2006-2011 | திரங்கானு |
14. | துவாங்கு அப்துல் ஹலீம் முவாட்ஸாம் ஷா | 2011-இன்றுவரை | கெடா |
15. | சுல்தான் முகமது 5 | அக்டோபர் மாதம் 2016-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார் | கிளந்தான் |
மாட்சிமை தங்கிய பேரரசரின் சலுகைகளும் பொறுப்புகளும்
மாட்சிமை தங்கிய பேரரசர் கீழ்கண்ட பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்:
- மந்திரிகள் சபை (உதாரணத்திற்கு பிரதமர், துணை பிரதமர், அரசாங்கத்தின் தலைமை செயலாளர்), ஆணையங்கள் மற்றும் நிர்வாகங்கள் (உதாரணத்திற்கு தேர்தல் ஆணையம், நீதித்துறை மற்றும் சட்ட சேவை ஆணையம், பொது சேவை ஆணையம்), நீதிபதிகள் (உதாரணத்திற்கு மலேசியாவின் தலைமை நீதிபதி, மலாயாவின் தலைமை நீதிபதி, சபா மற்றும் சரவாக்கின் தலைமை நீதிபதி), செனட்டர்கள், மற்றும் கவர்னர்கள் உள்ளிட்ட முக்கிய அரசாங்க பதவிகளை நியமித்தல்
- கவர்னர்கள் ஆளும் நான்கு மாநிலங்களின், மூன்று கூட்டரசு பிரதேசங்களின் மற்றும் தனது சொந்த மாநிலத்தின் இஸ்லாமியத் தலைவராக இருத்தல்
- ராணுவ சேவையில் உயர்ந்த பதவியான தலைமை தளபதியாக இருத்தல்
காப்பு நிலை அகற்றப்பட்டது
1993-ஆம் ஆண்டு, மாட்சிமை தங்கிய பேரரசர் மற்றும் மாநில ஆட்சியாளர்களின் தனிப்பட்ட செயல்களுக்கான காப்பு நிலை அகற்றப்படுவதற்காக, மலேசிய அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. அதோடு, மாட்சிமை தங்கிய பேரரசர் அல்லது மாநில ஆட்சியாளர்கள், தங்களுக்கோ அல்லது தங்களின் நேரடி குடும்ப உறுப்பினர்களுக்கோ பொது மன்னிப்பு வழங்க முடியாது. ஆயினும், அவர்கள் ஆட்சியாளர் மாநாட்டிடம் பொது மன்னிப்பு கோர முடியும்.
மலேசிய மாநிலங்களில் உள்ள பல்வேறு முடியாட்சி முறைகள்
தற்போது மலேசியாவில் ஒன்பது மாநிலங்கள் அரசியலமைப்பு முடியாட்சி முறையை பின்பற்றுகின்றன. மாநில அரசியல் சட்ட அமைப்புப்படி, ராஜ வம்சத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் ஆண் மட்டுமே மாநில ஆட்சியாளராக வர தகுதி உள்ளவர் ஆவர். மற்ற அரசியலமைப்பு முடியாட்சி முறையில் நிகழ்வது போல், இங்கே ஆட்சியாளார்கள் தினசரி ஆட்சியில் ஈடுபடுவதில்லை. இருப்பினும், அவர்கள் முஸ்லிம் தலைவர்களாக இருக்கும் உரிமையையும், மந்திர் பெசார் (மாநில ஆளுநர்) அல்லது மாநில அரசாங்க தலைவர் அவர்களை நியமிக்கும் உரிமையையும் தக்க வைத்துக் கொண்டனர்.
கெடா
சுருக்கமான வரலாறு
கெடாவின் இணைப் பெயர் டாருல் அமான் அல்லது ‘சமாதான உறைவிடம்’ ஆகும். ஆரம்ப காலகட்டத்தில் கெடா ஒரு இந்து இராஜ்ஜியமாக இருந்தது. இந்த இராஜ்ஜியத்தை கெமெரொனின் மகாராஜா டெர்பர் ராஜா என்கிற பண்டார் அப்பாஸ் கி.மு. 630 ல் நிறுவினார். பாரசீக அரசரான அவர், ஒரு போரில் தோல்வியுற்றபின், அங்கிருந்து தப்பி, கெடாவில் தஞ்சம் புகுந்தார். பண்டார் அப்பாஸ் கெடா மக்களுடன் ஒரு நல்ல உறவை உருவாக்கியதால், அவரை அவர்களுடைய அரசராக, ஸ்ரீ படுகா மஹாராஜா டெர்பர் ராஜா 1 என முடிசூட்டினர்.
11-ஆம் நூற்றாண்டு இறுதியில், இஸ்லாமின் செல்வாக்கு கெடாவை அடைந்தது. கெடாவின் 9-ஆவது அரசர், ஸ்ரீ படுகா மஹாராஜா டெர்பர் ராஜா 11, இஸ்லாம் மதத்திற்கு மாறி, பிறகு தன் பெயரை சுல்தான் முட்ஸஃபர் ஷா 1 (1136-1179) என மாற்றிக் கொண்டார். அன்று முதல், கெடா ராஜ்ஜியம் கெடா சுல்தானகமாகியது. வரலாற்று கூற்றுப்படி, கெடா ஸ்ரீ விஜயா ராஜ்ஜியம், சியாம், பிரிட்டன் மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்குள் வீழ்ந்துள்ளது. கெடா, சியாமின் கிளை மாநிலமாக இருக்கும் பொழுது, அது ‘புங்கா எமாஸ்’ அல்லது தங்க மலர்களையும் மற்ற மதிப்புமிக்க பரிசுகளையும் சியாம் ராஜ்ஜியத்திற்கு அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. 18-ஆம் நூற்றாண்டில், கெடா சுல்தான் சியாமியர்களின் தாக்குதலிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ள, பினாங்கு மற்றும் வெல்லெஸ்லியால் மாகாணத்தையும் (செபெராங் ப்பெரை) பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் பரிமாற்றம் செய்து கொண்டார். இருப்பினும், 1821-ஆம் ஆண்டு சியாமியர்கள் கெடா மீது படையெடுத்து மீண்டும் அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், சியாமியர்கள் பெர்லிஸ்ஸை கெடாவிடமிருந்து பிரித்தனர். 1909-ஆம் ஆண்டு ஆங்கிலோ-சியாம் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, பிரிட்டன் கெடா மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றது. இரண்டாம் உலகப் போரின் பொழுது, சியாம் ஜப்பானுடன் கூட்டணி வைத்துக் கொண்டதால், அதற்கு பரிசாக கெடாவை மீண்டும் கைப்பற்றியது. ஆனால், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, கெடா மீண்டும் பிரிட்டன் பேரரசுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு கெடா 1948-ஆம் ஆண்டு மலாயா கூட்டமைப்பில் இணைந்து, 1963-ஆம் ஆண்டு மலேசியாவிலும் இணைக்கப் பட்டது.
கெடாவின் முடியாட்சி அமைப்பு
கெடா சுல்தானகமாகியது பரம்பரை மற்றும் அரசியலமைப்பு முடியாட்சி முறையை பின்பற்றுகிறது. கெடாவின் தற்போதைய சுல்தான், சுல்தான் அப்துல் ஹலீம் முயட்ஸாம் ஷா (1927-இன்றுவரை; 1958-இன்றுவரை). அவர் இந்த அரியணையை மரபுரிமையாக அவருடைய தந்தை சுல்தான் பட்லீஷா (1894-1958; 1943-1958) அவர்களிடமிருந்து பெற்றார்.
கிளந்தான்
சுருக்கமான வரலாறு
கிளந்தான் வண்ணமயமான ஒரு வரலாற்றோடு இல்லாமல் ஒரு குழப்பமான சரித்திரத்தை கொண்டிருக்கின்றது. வரலாறு முழுவதும் சீனர்கள், இந்தியர்கள் மற்றும் சியாமிய வர்த்தகர்கள் கிளந்தானில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்ததால், அது வெளிநாட்டு சக்திகளின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் இந்த மாநிலத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டனர். 13-ஆம் மற்றும் 14-ஆம் நூற்றாண்டில், கிளந்தான் மாநிலம் முறையே மாஜாபாகித் மற்றும் ஸ்ரீ விஜயா பேரரசுவின் கிளை மாநிலமாக இருந்தது. 15-ஆம் நூற்றாண்டில் கிளந்தான் சியாமின் கிளை மாநிலமாகவும் பின்பு மலாக்காவின் கிளை மாநிலமாகவும் திகழ்ந்தது. கிளந்தான், சியாமின் கிளை மாநிலமாக இருக்கும் பொழுது, அது ‘புங்கா எமாஸ்’ அல்லது தங்க மலர்களையும் மற்ற மதிப்புமிக்க பரிசுகளையும் சியாம் ராஜ்ஜியத்திற்கு அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. மலாக்காவை போர்த்துகல் ஆக்கிரமிப்பு செய்த பொழுது, கிளந்தான் மாநிலம் பல சிறிய பகுதிகளாக பிரிக்கப்பட்டது. சியாமியர்கள் இந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர், அவைகளை பட்டாணி ராஜ்ஜியத்தின் அதிகாரத்திற்குள் உள்ளாக்கினர்.
1760-ஆம் ஆண்டு, குபாங் லாபுவிலிருந்து லோங் முகமது அல்லது லோங் பண்டாக் எனும் பிரபு கிளந்தானின் முந்தைய பகுதிகளை மீண்டும் இணைத்து தம்மை ஆட்சியாளரென பிரகடனபடுத்திக் கொண்டார். பல வருடங்களுக்குப் பிறகு, பட்டாணியின் போர்பிரபுவான, லோங் யூனுஸ், லோங் பண்டாக்கைப் பதவியிறக்கம் செய்து, தன்னை கிளந்தானின் அரசன் அல்லது ராஜாவாக பிரகடனப்படுத்திக் கொண்டார் (1734-1794; 1775-1794). ராஜா யூனுஸின் மறைவிற்குப் பிறகு, கிளந்தான் மீதுள்ள அதிகாரம், திரங்கானு சுல்தான் மன்சூர் அவர்களின் மகன், யாங் டி பெர்துவான் முடா தெங்கு முகமதுவின் (1794-1800) கீழ் கொண்டுவரப்பட்டது. 1800-ஆம் ஆண்டு, ராஜா யூனுஸின் மகன் லோங் முகமது தன்னை கிளந்தானின் ஆட்சியாளர் சுல்தான் முகமது 1 (1800-1835) என பிரகடனபடுத்திக் கொண்டார். கிளந்தான் 1948-ஆம் ஆண்டு மலாயா கூட்டமைப்பில் இணைந்து, பின்பு 1963-ஆம் ஆண்டு மலேசியாவிலும் இணைந்தது.
கிளந்தானின் முடியாட்சி அமைப்பு
கிளந்தான் மாநிலம் பரம்பரை மற்றும் அரசியலமைப்பு முடியாட்சி முறையைப் பின்பற்றுகிறது. கிளந்தானின் சுல்தானாக இருப்பவர், கிளந்தான் மாநிலத்தின் ஆட்சியாளராகவும், இஸ்லாம் மதத்தின் தலைவராகவும் இருப்பார். தற்போதைய கிளந்தானின் ஆட்சியாளர் சுல்தான் முகமது 5 (1969-இன்று வரை; 2010-இன்று வரை) ஆவர். அவர் இந்த அரியணையை மரபுரிமையாக அவருடைய தந்தை சுல்தான் இஸ்மாயில் பெட்ரா (1979-2010) அவர்களிடமிருந்து பெற்றார்.
ஜொகூர்
சுருக்கமான வரலாறு
ஆரம்ப காலகட்டத்தில், ஜொகூர் மாநிலம் மலாக்கா மாநில சுல்தானகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1511-ஆம் ஆண்டு போர்த்துகீசியர்கள் மலாக்காவைப் கைப்பற்றியதும் அவர்களிடமிருந்து தப்பித்து சுல்தான் முகமட் ஷா தன்னுடைய ராஜ்ஜியத்தை பிந்தானுக்கு இடம் பெயர்த்தார். தன் ராஜ்ஜியத்தை மீண்டும் கைப்பற்றும் அவருடைய முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இறுதியாக போர்த்துகல் 1526-ஆம் ஆண்டு பிந்தானுக்குள் நுழைந்து, அதிரடி தாக்குதல்கள் நடத்தியதால் அவர் வேறு வழியின்றி, கம்பார், சுமத்திராவிற்கு தப்பித்துச் சென்றார். சுல்தான் முகமது ஷா 1528-ஆம் ஆண்டு காலமான பின்பு, அவருடைய இரண்டு மகன்களும் தத்தம் சுல்தானகத்தை உருவாக்கினர். சுல்தான் முஸாஃபர் ஷா (1528-1549) பேராக் சுல்தானகத்தையும் சுல்தான் அலாவூதீன் ரியாட் ஷா மற்றும் அவரது துணைவியார் துன் ஃபதிமா (1513-1564; 1528-1564) ஜொகூர் சுல்தானகத்தையும் நிறுவினர். சிறிது காலத்திற்கு புதிய சுல்தான் மற்றும் அவருடைய வழிதோன்றல்களும் போர்த்துகல் மற்றும் ஆச்சேவிடமிருந்து பல தொல்லைகளை எதிர்கொண்டாலும் அவற்றை தகர்த்து தங்கள் ராஜ்ஜியத்தைத் தக்க வைத்துக் கொண்டனர்.
17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் டச்சுக்காரர்கள் தென்கிழக்கு ஆசியாவை வந்தடைந்து 1606-ஆம் ஆண்டு ஜொகூர் சுல்தானகத்துடன் இரண்டு கூட்டணிகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். டச்சு மற்றும் ஜொகூர் சுல்தானகங்கள் மலாக்காவை ஆக்ரமித்துக் கொண்டிருந்த போர்த்துகீஸை வீழ்த்த ஒன்றினைந்தன. ஒப்பந்தத்தின்படி, போருக்கு பிறகு, டச்சு மலாக்கா வை தன் வசப்படுத்திக் கொண்டு ஜொகூர் எல்லைக்குற்பட்ட பகுதிகளை ஆக்கிரமிப்பதில்லை என உறுதி கொடுத்தது.
1666-ஆம் ஆண்டிற்கும் 1673-ஆம் ஆண்டிற்கும் இடையில், ஜொகூர் சுல்தானகத்தின் ஒரு பகுதியான ஜாம்பி, ஒரு வளமான பிரதேசமாக வளர்ந்து ஜொகூரிடமிருந்து பிரிந்து செல்ல முயற்சித்தது. இந்த பிரிவினைவாத எண்ணம் ஓர் உள்நாட்டுப் போரை உருவாக்கியது. இந்தச் சமயம் ஜொகூர் சுல்தான் தன் சுல்தானகத்தை ஒன்றிணைத்து வைத்திருக்க போராடினார். அதனால், ஜொகூர் மாநிலத்தின் தலைநகரை பல முறை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினார். 17-ஆம் நூற்றாண்டில், மலாக்காவை விட ஜொகூர் மாநிலம் ஒரு பெரிய வர்த்தக மையமாக உருவெடுத்தது. இந்த முன்னேற்றத்தில் டச்சுக்காரர்கள் மகிழ்ச்சி அடையாமலிருந்தாலும் முன்பு செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு மரியாதை அளித்தனர். மலாக்காவின் மூலமுதலான வம்சத்தின் கடைசி வாரிசு ஜொகூர் சுல்தான் மமுட் ஷா 11 (1675-1699;1685-1699) ஆவார். அவர் ஓர் ஆண் வாரிசும் இல்லாமல் காலமானதால், நீதிமன்றம் பென்டாஹரா அப்துல் ஜாலில் (1699-1720) அவர்களை வாரிசாக்கி சுல்தான் அப்துல் ஜாலில் 5 என நியமனம் செய்தது.
அவரின் அரியணை, தன்னை சுல்தான் மமுட் ஷா 11 அவர்களின் மகன் எனக் கூறிக்கொண்ட ராஜா கெச்சில் அவர்களால் பறித்துக் கொள்ளப்பட்டது. ராஜா கெச்சில் ஒரு கொலையாளியை பணியமர்த்தி சுல்தான் அப்துல் ஜாலில் 5 அவர்களை கொலை செய்த பின்னர் தன்னை ஜொகூர் சுல்தான் என முடிசூடிக்கொண்டார். இருப்பினும், ராஜா கெச்சிலின் ஆட்சிக்காலம் குறுகியதாக அமைந்தது. சுல்தான் அப்துல் ஜாலிலின் மகன், சுல்தான் சுலைமான் (1722-1760) அந்த அரியணையை புகிஸில் அதிகாரத்தில் இருந்த டாயிங் பராணியின் உதவியுடன் மீட்டெடுத்தார். சுல்தான் சுலைமான் ஜொகூர் சுல்தானாக முடிசூட்டப்பட்ட பின்னர், டாயிங் பராணியின் தம்பியான டாயிங் மெரெவா, யாம் துவான் மூடா அல்லது அரியணையின் அடுத்த வாரிசாக நியமிக்கப்பட்டார். 1819-ஆம் ஆண்டு, ஜொகூர் சுல்தானகம் ஜொகூர் நிலப்பகுதி மற்றும் ரியாவ்-லிங்கா பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஜொகூர் சுல்தான் ஜொகூர் நிலப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, ரியாவ்-லிங்கா பகுதியை புகீஸ் குலத்திற்கு கொடுத்தார்.
ரியாவ்-லிங்கா இழப்பிற்குப் பிறகு, ஜொகூர் தொடர்ந்து ஒரு நவீன சுல்தானகமாக உருவெடுத்தது. சுல்தான் அபு பாக்கார் (1833-1895; 1862-1895) அவர்களின் ஆட்சிக்காலத்தில், பிரிட்டிஷ் பாணியிலான நிர்வாகம் மற்றும் மாநில அரசியலை நிறுவினார். ஆகையால், அவர் ஜொகூரின் நவீன தந்தை என அறியப்பட்டார். 1948-ஆம் ஆண்டு, ஜொகூர், மலாயா கூட்டமைப்பில் இணைந்து பின்பு 1963-ஆம் ஆண்டு மலேசியாவிலும் இணைந்தது.
ஜொகூரின் முடியாட்சி அமைப்பு
ஜொகூர் மாநிலம் பரம்பரை மற்றும் அரசியலமைப்பு முடியாட்சி முறையை பின்பற்றுகிறது. ஜொகூரின் தற்போதைய சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இஸ்மாயில் (1958-இன்று வரை; 2010-இன்று வரை) ஆவார். அவர் இந்த அரியணையை மரபுரிமையாக அவருடைய தந்தை சுல்தான் இஸ்கன்டார் (1932-2010; 1981-2010) அவர்களிடமிருந்து பெற்றார்.
நெகிரி செம்பிலான்
சுருக்கமான வரலாறு
நெகிரி செம்பிலான், மலாக்கா சுல்தானகத்தின் ஒரு கிளை மாநிலமாக இருந்தது. மலாக்கா போர்த்துகலின் ஆட்சிக்குள் வீழ்ந்த பிறகு, அது ஜொகூர் சுல்தானகத்தின் பாதுகாப்பின் கீழ் வந்தது. 14-ஆம் நூற்றாண்டில் சுமத்திராவிலிருந்து மினாங்கபாவு குடிமக்கள் நெகிரி செம்பிலானில் குடியேறினர். எனவே, மற்ற மாநிலங்களைப் போலல்லாமல் நெகிரி செம்பிலானில் உள்ள பெருபான்மை மக்கள் தாய்வழியான அதாவது மினாங்கபாவினரின் தனித்துவம் வாய்ந்த பண்புகளைக் கொண்டிருப்பர். 18-ஆம் நூற்றாண்டில், ஜொகூர் சுல்தானகம் உள் நாட்டு விவகாரங்களைச் சமாளிக்க வேண்டியிருந்ததால், புகீஸின் தாக்குதல்களிலிருந்து நெகிரி செம்பிலானை பாதுகாக்க முடியவில்லை. ஆகையால், நெகிரி செம்பிலான் மினாங்கபாவைச் சேர்ந்த சுல்தான் அப்துல் ஜாலில் பகார் ருயோங் அவர்களின் உதவியை நாடிச்சென்றது. அவர் அவருடைய மகன் ராஜா மெலெவாரை அவரின் பிரதிநிதியாக அனுப்பி வைத்தார்.
எனினும், ராஜா மெலெவார் நெகிரி செம்பிலானை வந்தடைந்ததும், வேறொருவரான, ராஜா காதிப் தன்னை நெகிரி செம்பிலானின் ஆட்சியாளரென அறிவித்துக் கொண்டதை அறிந்தார். ராஜா மெலெவார் போர் தொடுத்து, ராஜா காதிப்பை பதவியிலிருந்து இறக்கி, நெகிரி செம்பிலானின் சிம்மாசனத்தில் ஆட்சியாளராக அமர்ந்தார். ஜொகூர் சுல்தானகம், ராஜா மெலெவாரை (1773-1795) நெகிரி செம்பிலானின் ஆட்சியாளராக அங்கீகாரப்படுத்தி யாம் துவான் செரி மெனாந்தி அல்லது ‘செரி மெனாந்தியின் மிக உயர்ந்த அரசர்’ என்ற பட்டத்தை வழங்கியது. ராஜா மெலெவாரின் மறைவிற்குப் பிறகு அரியணையைக் கோருபவர்களின் போட்டியும் அவர்களுக்கு கிடைத்த ஆதரவும் பல்வேறாக இருந்ததால், அடுத்த ஆட்சியாளரின் தேர்வு உள்நாட்டுப் போரிலும் உறுதியற்ற நிர்வாகத்திலும் முடிந்தது. 1873-ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் நெகிரி செம்பிலானில் உள்ள அவர்களின் அதிகாரத்தை பாதுகாக்க அங்கு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் தலையிட்டது. அதற்குப் பின்னர், நெகிரி செம்பிலான் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பின் கீழ் வீழ்ந்தது. 1948-ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மலாயா கூட்டமைப்பில் இணைந்து பின்பு 1963-ஆம் ஆண்டு மலேசியாவிலும் இணைந்தது.
நெகிரி செம்பிலானின் முடியாட்சி அமைப்பு
நெகிரி செம்பிலான், தேர்தல் மற்றும் அரசியலமைப்பு முடியாட்சி முறையை பின்பற்றுகிறது. நெகிரி செம்பிலானின் ஆட்சியாளரை யாங் டி பெர்துவான் பெசார் அல்லது ‘மிக உயர்ந்த அவர்’ என்று அழைக்கின்றனர். அவரை உன்டாங் என அறியப்படும் தலைமை ஆளுநர்கள் தேர்ந்தெடுப்பர். கீழே கொடுக்கப்பட்டுள்ள உன்டாங் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு ஆனால் தேர்தலில் போட்டியிடும் உரிமை இல்லை:
- சுங்கை உஜோங் உன்டாங்
- ஜெலெபு உன்டாங்
- ஜொஹொல் உன்டாங்
- ரெம்பாவ் உன்டாங்
யாங் டி பெர்துவான் பெசார் அவர்களின் பதவிக்கு தகுதியாக இருக்க, அந்த வேட்பாளர் ஒரு ஆணாகவும், முஸ்லிமாகவும் மற்றும் ராஜா ராடின் இப்னி ராஜா லெங்காங் அவர்களின் மரபு வழித்தோன்றலாகவும் இருத்தல் வேண்டும். தற்போதைய நெகிரி செம்பிலானின் யாங் டி பெர்துவான் பெசார், துங்கு முஹ்ரிஸ் (1948-இன்று வரை; 2008-இன்று வரை) ஆவார்.
பகாங்
சுருக்கமான வரலாறு
பகாங்கின் முதலாவது சுல்தான், சுல்தான் முகமது ஷா (1470-1475) ஆவார். அவர் மலாக்கா அரியணையின் அடுத்த வாரிசாக இருக்கும் பொழுது ஒரு கொலை செய்ததற்காக அவருடைய தந்தை சுல்தான் மன்சுர் (1459-1477) அவரை பகாங்கிற்கு விரட்டி அடித்தார். பகாங் மாநிலம் ஸ்ரீ விஜயா, மஜாபாகிட், சியாம் மற்றும் மலாக்கா ஆகிய ராஜ்ஜியங்களின் அதிகாரங்களுக்குக் கீழ் இருந்தது. 16-ஆம் நூற்றாண்டில் பகாங் போர்த்துகல், டச்சு, ஜொகூர் மற்றும் ஆச்சே ஆகியவைகளின் கவனத்தை கவரக்கூடிய இடமாக இருந்தது. 17-ஆம் நூற்றாண்டில் பகாங், ஜொகூர் சுல்தானகத்தின் ஒரு பகுதியாக ஆயிற்று. எனினும் பகாங்கின் ஆட்சியாளர்கள் மலாக்கா மற்றும் ஜொகூர் அரச குடும்பத்தின் வம்சாவளியை சேர்ந்தவர்களாகையால், அவர்கள் ஓரளவிலான தன்னாட்சி உரிமையை ஜொகூர் சுல்தானகத்திடமிருந்து பெற்றுக் கொண்டனர். பகாங்கின் பென்டாஹரா துன் அலியின் ஆட்சிக்காலத்தில் (1806-1847) சமாதானம் மற்றும் நிலையான நிர்வாகம் பராமரிக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக, அவருடைய மறைவிற்குப் பின்னர், அவருடைய மகன்கள் துன் முதாஹிர் (1858-1863) மற்றும் துன் அகமது ஆகிய இருவரும் அரியணையில் அமருவதில் உரிமைகோரி வாதிட்டு ஒரு உள்நாட்டுப் போரை ஆரம்பித்தனர். பின்னர் துன் அகமது (1863-1881) புதிய சுல்தானாக முடிசூட்டப்பட்டார். ஆனாலும் அவருடைய அதிகாரம் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைக்கப்பட்டு, அவர் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு கீழ்படியும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.
ஜொகூர் சுல்தானகம் ரியாவ்-லிங்கா பகுதிகளை புகிஸ் ஆட்சியாளர்களிடம் இழந்த பிறகு ஜொகூரின் தெமெங்குங் இப்ராஹிம், பகாங்கின் பென்டாஹரா துன் முதாஹிர் (1858-1863) அவர்களுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தின்படி, தெமெங்குங் இப்ராஹிம் மற்றும் அவருடைய சந்ததியினர் ஜொகூர் மாநிலத்தை ஆளும் உரிமையையும், பென்டாஹரா துன் முதாஹிர் மற்றும் அவருடைய சந்ததியினர் பகாங் மாநிலத்தை ஆளும் உரிமையையும் பெற்றனர். அந்த ஒப்பந்தம் கையெழுத்திட்டப் பிறகு, பகாங் ஜொகூரிடமிருந்து விடுதலை பெற்றது. 1948-ஆம் ஆண்டு பகாங் மலாயா கூட்டமைப்பில் இணைந்து பின்பு 1963-ஆம் ஆண்டு மலேசியாவிலும் இணைந்தது.
பகாங் மாநிலத்தின் முடியாட்சி அமைப்பு
மலேசியாவின் மூன்றாவது மிகப் பெரிய மாநிலமாக பகாங் தற்போது திகழ்கின்றது. பகாங், பரம்பரை மற்றும் அரசியலமைப்பு முடியாட்சி முறையைப் பின்பற்றுகிறது. தற்போதைய பகாங்கின் ஆட்சியாளர் சுல்தான் அகமது ஷா (1974-இன்று வரை) ஆவர். அவர் இந்த அரியணையை மரபுரிமையாக மறைந்த அவருடைய தந்தை சுல்தான் அபு பாக்கார் (1904-1974; 1932-1974) அவர்களிடமிருந்து பெற்றார்.
பெர்லிஸ்
சுருக்கமான வரலாறு
ஆரம்ப காலகட்டத்தில் பெர்லிஸ், கெடா மாநில சுல்தானகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 19-ஆம் நூற்றாண்டில், கெடா சியாமியர்களின் ஆட்சிக்குக் கீழ் இருக்கும் பொழுது, சியாம் பெர்லிஸை கெடாவிலிருந்து பிரித்து கவர்னர் மற்றும் துணை கவர்னர்களைப் பணியமர்த்தியது. மே மாதம் 20-ஆம் திகதி, 1843-ஆம் ஆண்டு, சியாமியர்கள் சாயிட் ஹுசேன் ஜமாலுலாயில் அவர்களை பெர்லிஸின் ராஜாவாக (1843-1873), அதாவது ஓர் அரசனுக்கு இணையான ஆட்சியாளாராக முடிசூட்டியது. அந்த புதிய ராஜா, கெடா சுல்தானின் தாய்வழிப் பேரனாவார். கெடா சுல்தானகத்தைப் போல, 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சியாம், பெர்லிஸ் உட்பட தன் ஆட்சியின் கீழுள்ள பல பகுதிகளை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு விட்டுக்கொடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது, சியாமின் ஜப்பானுடனான கூட்டணியால் பெர்லிஸ் சியாமிய ஆட்சியாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அந்தப் போரில் ஜப்பான் தோற்றதால், பெர்லிஸ் பிரிட்டனிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. 1948-ஆம் ஆண்டு, பெர்லிஸ் மலாயா கூட்டமைப்பில் இணைந்து பின்பு 1963-ஆம் ஆண்டு மலேசியாவிலும் இணைந்தது.
பெர்லிஸ் மாநிலத்தின் முடியாட்சி அமைப்பு
பெர்லிஸ், பரம்பரை மற்றும் அரசியலமைப்பு முடியாட்சி முறையை பின்பற்றுகிறது. மற்ற பெரும்பான்மையான மாநிலங்களைப் போலல்லாமல், பெர்லிஸின் அரசர் சுல்தான் என்றில்லாமல் ராஜா என அழைக்கப்படுகிறார். பெர்லிஸின் தற்போதைய ராஜா, துவாங்கு சேட் சிராஜூடின் ஜமாலுலாயில் (1943-இன்று வரை; 2000-இன்று வரை) ஆவார். அவர் இந்த அரியணையை மரபுரிமையாக மறைந்த அவருடைய தந்தை துவாங்கு சேட் புத்ரா ஜமாலுலாயில் (1920-2000; 1945-2000) அவர்களிடமிருந்து பெற்றார்.
பேராக்
சுருக்கமான வரலாறு
1511-ஆம் ஆண்டு போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டுக்குள் மலாக்கா வீழ்ந்த பின், மலாக்காவின் சுல்தான் மமுட் ஷா 1 அவர்களின் மகனான சுல்தான் அலாவூதின் ரியாட் ஷா 2, பேராக் சுல்தானகத்தை 1528-ஆம் ஆண்டு நிறுவி, தம்மை பேராக்கின் முதல் சுல்தான் என முடிசூடிக்கொண்டார். 17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் பேராக்கை வந்தடைந்த டச்சுக்காரர்கள், ஆச்சேவுடனான தங்கள் தொடர்பை பயன்படுத்திக் கொண்டு, பேராக் சுல்தானை ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட கட்டாயப்படுத்தினர். அந்த ஒப்பந்தத்தின்படி, அவர்கள் பேராக் மாநிலத்தில் விவசாயம் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டனர். எனினும், டச்சுக்காரர்கள் பேராக் மக்களிடம் ஒரு சுமூகமான உறவை மேம்படுத்த தவறியதால் பேராக் மக்கள் அந்த விவசாய நிலங்களை அழித்து, டச்சுக்காரர்களை வெளியேற கட்டாயப்படுத்தினர். 1670-ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள், பேராக் ஆட்சியாளர்களிடமிருந்து அனுமதி பெற்று பங்கோர் தீவில் கோஃதா பெலன்டா எனும் கோட்டையைக் கட்டினர். எனினும், 15 வருடங்களுக்கு பிறகு, பேராக் மக்கள் அந்த கோட்டையை தாக்கி மீண்டும் டச்சுக்காரர்ளின் நடவடிக்கைகளைத் தகர்தெறிந்தனர்.
19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ், பேராக்கை தன் அதிகாரத்தின் கீழ்படிய வைத்து, சுல்தான் அப்துல்லாவை பேராக்கின் புதிய அரசராக முடிசூட்டி, ஜேம்ஸ் பேர்ச் எனும் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை சுல்தானின் ஆட்சியை நிர்வகிக்க நியமித்தது. எதிர்பாராதவிதமாக, பேராக் மக்களால் திரு.பேர்ச் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியான பிரிட்டிஷ், சுல்தான் அப்துல்லாவை சீசெல்சிற்கு நாடுகடத்திய பின் சுல்தான் யூசுஃப் ஷாரிஃபுடின் முட்ஸஃபார் ஷாவை 1877-ஆம் ஆண்டு புதிய அரசராக்கினர். அதன்பின், பிரிட்டிஷ் மலாய் மற்றும் உள்ளூர் கலாச்சாரங்களை அறிந்த சிர் ஹக் லாவ் என்பவரை புதிய அதிகாரியாக நியமித்தது.அவர் தன் முன்னோடியைப் போல் இல்லாமல், பேராக்கின் மிகச் சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார். பேராக் 1948-ஆம் ஆண்டு மலாயா கூட்டமைப்பில் இணைந்து பின்பு 1963-ஆம் ஆண்டு மலேசியாவிலும் இணைந்தது.
பேராக் மாநிலத்தின் முடியாட்சி அமைப்பு
பேராக் தேர்தல் மற்றும் அரசியலமைப்பு முடியாட்சி முறையை பின்பற்றுகிறது. பேராக்கின் 18-ஆம் சுல்தான், சுல்தான் அகமடின் (1786-1806) அவர்களின் வழித்தோன்றல்களில் மிக மூத்த இளவரசர்களின் மத்தியிலிருந்துதான் பேராக்கின் ஆட்சியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆகையால், முந்தைய சுல்தானின் ஆண் வாரிசுகளும் பேராக்கின் அரசராக முடிசூட தகுதியுடையவர்கள் ஆவர். பேராக்கின் தற்போதைய சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின் ஷா (1956-இன்று வரை; 2014-இன்று வரை).
சிலாங்கூர்
சுருக்கமான வரலாறு
சிலாங்கூர் மலாக்கா ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. போர்துகல், மலாக்காவை தன் வசம் இணைத்துக் கொண்ட பொழுது, ஜொகூர், ஆச்சே மற்றும் சியாம், சிலாங்கூர் பிரதேசத்திற்கு உரிமைக் கோரின. ஆனால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை. டச்சுக்காரர்கள் மலாக்காவை வந்தடைந்த பொழுது, அவர்கள் புகீஸ் குடியேறிகளை சிலாங்கூர் மாநிலத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். சிலாங்கூர் மாநிலம் வந்த அந்த புதுமுகங்கள், மினாங்கபாவு குடியேறிகளை இடம்பெயர்ந்தனர். சுலாவேசி ஆட்சியாளர்களுடன் தொடர்புடையவர்கள் என தங்களை கூறிக் கொண்ட லூவூ குடியேறிகள், சிலாங்கூர் சுல்தானகத்தின் ஆட்சியாளர்களை பதவியிலிருந்து இறக்கினர். சிலாங்கூரின் முதல் சுல்தான், ராஜா லூமு என அறியப்பட்ட சுல்தான் சாலேஹுடின் ஷா (1705-1778; 1756-1778) ஆவார். இவர் புகீஸ் போர்வீரர் டாயிங் செலாக் அவர்களின் மகன் ஆவர். துவக்கத்தில் பேராக் மற்றும் ஜொகூரின் ஆட்சியாளர்கள் சுல்தான் சாலேஹுடின் ஷாவின் முடிசூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் சுல்தான் சாலாஹுடின் ஷா, பேராக் அரச குடும்பத்தினருடன் திருமணம் மூலம் ஒரு சட்டப்பூர்வமான உறவை வைத்துக்கொண்டார். 19-ஆம் நூற்றாண்டில், சிலாங்கூரில் உள்ள வெள்ளி வளங்களால் சிலாகூர் பொருளாதார வளர்ச்சி அடைந்தது. சுல்தான் முகமது ஷா (1826-1857) அவர்களின் ஆட்சிக்காலத்தில் சிலாங்கூர் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அவை பெர்னாம், குவாலா சிலாங்கூர், கிள்ளான், லாங்காட் மற்றும் லுக்கூட் ஆகும். இந்த பகுதிகளுக்கு தனித்தனியே தலைவர்கள் இருந்தனர்.
1866-ஆம் ஆண்டு, ராஜா அப்துல் சாமாட் என அறியப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் (1804–1898; r. 1857–1898), கிள்ளானின் ஆட்சியாளரான ராஜா அப்துல்லா அவர்களுக்கு சாதகமாக இருந்ததோடு, முன்னாள் ஆட்சியாளரான ராஜா மஹாடி அவர்களின் மகனுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்த நியமனமே கிள்ளான் போர் ஏற்பட காரணமாக அமைந்தது. சுல்தான் அப்துல் சமாட் அவர்களின் மருமகன், தெங்கு கூடின், அந்த நிலைமையை சீர்ப்படுத்தப் பணி அமர்த்தப்பட்டார். தெங்கு கூடின், கூலிப்படையினர், பகாங் சுல்தானகம் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த செர் ஆண்ட்ரூ கிளார்க் ஆகியோரின் உதவியை நாடினார். இதன் காரணமாக, மற்ற மாநிலங்களைப் போலல்லாமல் சிலாங்கூர் மாநிலம், பிரிட்டிஷ் பங்களிப்பை தானே அழைத்து வரவேற்றது. மேலும் சுல்தான் அப்துல் சாமாட், பிரிட்டிஷ் வாசியான ஃப்ரன்க் சிவெட்டன்ஹம் என்பவரை அவருடைய ஆலோசகராக ஏற்றுக் கொண்டார். பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் ஏற்பட்ட ஒரு நிலையான ஆட்சியால், சிலாங்கூர் மாநிலம் செழிப்பு அடைந்தது. சிலாங்கூர் மாநிலம், 1948-ஆம் ஆண்டு மலாயா கூட்டமைப்பில் இணைந்து பின்பு 1963-ஆம் ஆண்டு மலேசியாவிலும் இணைந்தது. சிலாங்கூரின் சுல்தான் சாலாஹுடின் (1926-2001; 1960-2001) கோலாலம்பூரை 1974-ஆம் ஆண்டும் மற்றும் புத்ரா ஜெயாவை 2001-ஆம் ஆண்டும் மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க சம்மதித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தின் முடியாட்சி அமைப்பு
சிலாங்கூர் மாநிலம், பரம்பரை மற்றும் அரசியலமைப்பு முடியாட்சி முறையை பின்பற்றுகிறது. சிலாங்கூரின் தற்போதைய சுல்தான், சுல்தான் ஷராஃபுடீன் (1945-இன்று வரை; 2001-இன்று வரை) ஆவர். அவர் இந்த அரியணையை மரபுரிமையாக அவருடைய தந்தை சுல்தான் சாலாஹுடின் அவர்களிடமிருந்து பெற்றார்.
திரங்கானு
சுருக்கமான வரலாறு
ஆரம்ப காலகட்டத்தில் திரங்கானு, மலாக்கா மற்றும் ஜொகூர் சுல்தானகத்தின் ஆளுமைக்கு கீழிருந்தது. மேலும், திரங்கானு கல்வெட்டு குறிப்புகளின்படி, அது இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட முதலாவது மலாய் பிரதேசமாகும். 1725 ஆம்-ஆண்டு, ஜொகூர் சுல்தானின் உறவினரான திரங்கானு சுல்தான், துன் ஸைனால் அபிடின் (1725-1733), கீழ் திரங்கானு ஒரு சுதந்திர சுல்தானகமாக ஆனது. 19-ஆம் நூற்றாண்டில் அரசியல் அதிகார மாற்றத்தால், திரங்கானு சியாமின் கிளை பிரதேசமானது. மேலும் அது ‘புங்கா எமாஸ்’ அல்லது தங்க மலர்களையும் மற்ற மதிப்புமிக்க பரிசுகளையும் சியாம் ராஜ்ஜியத்திற்கு அனுப்பும் வழக்கத்தைக் கொண்டிருந்தது. இக்காலகட்டத்தில், சியாம் அதிகமான தன்னாட்சி உரிமையை திரங்கானுவிற்கு வழங்கியதால் திரங்கானு ஒரு வளமான பிரதேசமாக ஆனது. 20-ஆம் நூற்றாண்டில் திரங்கானு பிரிட்டனின் ஒரு கிளை மாநிலமானது. பிரிட்டிஷ் பேரரசு திரங்கானுவை ஒரு பிரிட்டிஷ் ஆலோசகரை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தியது. இருப்பினும், இந்த சூழ்ச்சி உள்ளூர் ஆட்சியாளர்களிடையே எடுபடவில்லை. ஜப்பானின் ஆக்கிரமிப்பிற்கு பிறகு, குறுகிய காலத்திலேயே சியாம் மீண்டும் திரங்கானு மீதான தன் கட்டுப்பாட்டை கைப்பற்றியது. ஆனாலும், இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, திரங்கானு பிரிட்டிஷ் பேரரசுவிடம் ஒப்படைக்கப் பட்டது. திரங்கானு 1948-ஆம் ஆண்டு மலாயா கூட்டமைப்பில் இணைந்து, பின்பு 1963-ஆம் ஆண்டு மலேசியாவிலும் இணைந்தது.
திரங்கானு மாநிலத்தின் முடியாட்சி அமைப்பு
திரங்கானு மாநிலம் பரம்பரை மற்றும் அரசியலமைப்பு முடியாட்சி முறையை பின்பற்றுகிறது. திரங்கானுவின் தற்போதைய சுல்தான், துவாங்கு மிஸான் ஸைனால் அபிடின் (1962–இன்று வரை; 1998-இன்று வரை). அவர் இந்த அரியணையை மரபுரிமையாக அவருடைய தந்தை மறைந்த சுல்தான் மமுட் அவர்களிடமிருந்து பெற்றார்.
மூலம்:
- http://thecommonwealth.org/our-member-countries/malaysia/history
- http://www.nationsonline.org/oneworld/malaysia.htm
- http://www.countryreports.org/country/Malaysia.htm
- http://www.countryreports.org/country/Malaysia/government.htm
- http://www.countryreports.org/country/Malaysia.htm
- http://www.wonderfulmalaysia.com/malaysia-history-and-historical-facts.htm
- http://www.kln.gov.my/web/guest/history
- http://www.thestar.com.my/news/nation/2016/10/11/rulers-to-choose-next-yang-dipertuan-agong/
- https://en.wikipedia.org/wiki/Yang_di-Pertuan_Agong
- https://en.wikipedia.org/wiki/Monarchies_of_Malaysia
- https://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate
- http://factsanddetails.com/southeast-asia/Malaysia/sub5_4c/entry-3672.html
- http://www.malaysianbar.org.my/constitutional_law/powers_and_functions_of_state_rulers.html
- https://en.wikipedia.org/wiki/Johor_Sultanate\
- https://en.wikipedia.org/wiki/Johor
- https://en.wikipedia.org/wiki/Kedah_Sultanate
- https://www.facebook.com/notes/dravidian-keyboard-warriors/kesultanan-negeri-kedah-kedah-sultanate-invasion-of-chola-kadaram-kondan-conquer/1085195028161653/
- https://en.wikipedia.org/wiki/History_of_Kedah
- https://en.wikipedia.org/wiki/Kelantan
- https://en.wikipedia.org/wiki/Sultan_of_Kelantan
- https://en.wikipedia.org/wiki/Negeri_Sembilan
- https://en.wikipedia.org/wiki/Pahang
- https://en.wikipedia.org/wiki/Sultan_of_Pahang
- https://en.wikipedia.org/wiki/Abu_Bakar_of_Pahang
- https://en.wikipedia.org/wiki/Ahmad_Shah_of_Pahang
- https://en.wikipedia.org/wiki/Perak
- https://en.wikipedia.org/wiki/Abdul_Samad_of_Selangor
- https://en.wikipedia.org/wiki/Salahuddin_of_Selangor
- https://en.wikipedia.org/wiki/Mahmud_of_Terengganu
- http://www.terengganu.gov.my
- https://en.wikipedia.org/wiki/Elective_monarchy
மேலும் பல சுவாரஸ்யமான இணைப்புகளுக்கு:
- The Buddhist Kingdoms of Indonesia
- The Crown Prince of Johor Urges Muslims to Respect Other Beliefs
- Emperor Ashoka The Great
- Emperor Kangxi
- King Milindu (Menader I) & Arahanth Nagasena (Part 1)
- The Sixteen Dreams of King Pasenadi Kosol and Their Interpretations by The Buddha
- Britain Should Stop Trying to Pretend That Its Empire Was Benevolent
- 5 Atrocities of the British Empire
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
நன்றி ரின்போச்சே இந்த கட்டுரையின் நோக்கம், நம் மாட்சிமை தங்கிய பேரரசரின் கீழ் இயங்கும் ஆட்சி முறையை ஆய்வு செய்வது ஆகும். மேலும் பரம்பரை அல்லது தேர்தல்வழி தேர்ந்தெடுக்கப்படும் முடியாட்சி முறை கீழ் ஆட்சி செய்யப்படும் ஒன்பது மாநிலங்களின் மீதும் நாம் கவனம் செலுத்த உள்ளோம்.