நாவில் சுவையூறும் 25 வகையான மலேசிய உணவுகள்
மலேசியாவில் வாழ்வதற்கோ அல்லது சுற்றிப் பார்ப்பதற்கோ மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்று அதன் உணவு வகைககள் என்பது பெரும்பாலனோரின் கருத்து. அவை மலிவானதாகவும் பல வகைகளிலும் கிடைக்கப் பெறுகின்றன. நான் மலேசியாவில் இருக்கும் அதிசுவையான உணவு வகைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். பெரும்பாலான உணவு வகைகள் அசைவமாக இருக்கும் என்பதை நான் அறிவேன். ஆயினும், நான் மாமிசம் உண்பதை ஆதரிக்கவில்லை, ஆனால், இந்த உணவு வகைகள் சைவமாகவும் கிடைக்கும். சில சைவ உணவுகள் அசைவத்தைக் காட்டிலும் ருசி மிகுந்ததாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். நீங்கள் இது வரை மலேசியாவிற்கு வருகை புரியாமலிருந்தாலோ அல்லது வருவதற்கு திட்டமிட்டுக் கொண்டிருந்தாலோ, இங்கே உள்ள உணவு வகைகள் உங்களை மலேசியாவிற்கு மீண்டும் வருகை புரிவதற்கு ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.
நாவில் சுவையூறும் இந்த 25 வகையான உணவுகள், மலேசிய உணவு பாராம்பரியத்தின் சிறப்பையும் அதன் மாறுபட்ட தன்மைகளையும் எடுத்துக் காட்டுகின்றன. என்னைப்போல் சைவ உணவுப் பிரியர்களே, கவலை வேண்டாம். மலேசியாவில் நிறைய சைவ உணவகங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, கேச்சாரா ஓசசிஸ் (Kechara Oasis) உணவகம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவு வகைகளை சைவமாக சமைத்து விற்கின்றனர்.
இந்த கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள உணவு வகைகளின் படங்கள் உங்களின் கண்ணுக்கு விருந்தாய் அமையும் என நான் நம்புகின்றேன். மலேசிய உணவு வகைகளைப் பற்றிய உங்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் கீழ்க்காணும் கருத்து பகுதியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
திசெம் ரின்போச்சே
1. அசாம் லக்சா
அசாம் லக்சா மீனை மையமாக கொண்டு தயாரிக்கப்படும் காரமான மீ சூப் ஆகும். இது பிரபலமான பெரனாக்கான் சமூகத்தினரின் உண வகைகளில் ஒன்று. சீனாவிலிருந்து மலேசிய நாட்டிற்குப் புலம் பெயர்ந்த சீனர்களின் கலாச்சாரமும் உள்ளூர் மலாய்க்காரர்களின் கலாச்சராமும் கலந்து தோன்றிய பெரனாக்கன் சமூகத்தினர் மேம்படுத்திய சீனர் மற்றும் பாரம்பரிய மலாய் உணவின் கலவையாகும் இந்த அசாம் லக்சா. இது மலேசியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு வகையாகும். இதனை நீங்கள் அனைத்து இடங்களிலும் குறிப்பாக 13 மாநிலங்களில் ஒன்றான பினாங்கு மாநில ஒட்டுக் கடைகளில் உண்ணலாம்.
அசாம் லக்சா மீன், நறுக்கிய வெள்ளரித்துண்டுகள், வெங்காயம், அன்னாசி, சிகப்பு மிளகாய், புதினா கீரை, டவுன் கேசும் (வியட்நாம் புதினா) மற்றும் பூங்கா கந்தான் (டோர்ச் கிஞ்சர்) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இது பெரும்பாலும் தடிப்பு மீ மற்றும் இறால் விழுதுடன் பரிமாறப்படுவதால் அதன் கடுமையான சுவை சிலருக்கு திகட்டலாம்.
சைவ அசம் லக்சா கேல்ஐஎ2-ல் இருக்கும் பீ லோஹாஸ் (Be Lohas), கோலாலம்பூரில் இருக்கும் வாட்டர் லில்லி உணவகம் (Water Lily Restaurant), கோலாலம்பூர் பீயோன்ட் வெஜ்ஜி (Beyond Veggie) மற்றும் மலாக்காவில் உள்ள வெஜ்ஜி பிளானட் (Veggie Planet)ஆகிய இடங்களில் கிடைக்கும்.
2. ரோஜாக்
ரோஜாக், பலவகை பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் பாரம்பரிய சாலட் உணவாகும். வழக்கமாக, ரோஜாக் கூடுதலான இறால் விழுதுடன் பரிமாறப்படும், ஆதலால் கடுமையான வாசனையைத் தாங்கி கொள்ளமுடியாதவர்களுக்கு இது தகுந்த உணவல்ல. மலேசியாவில் நான்கு வகையான ரோஜாக் இருக்கின்றன : பழ ரோஜாக்,பினாங்கு ரோஜாக், சோதோங் கங்கோங் மற்றும் இந்தியர் ரோஜாக்.
பழ ரோஜாக் பொதுவாக வெள்ளரிக்காய், அன்னாசிப்பழம், தண்ணிக்கிழங்கு (அல்லது மெக்சிகன் தெர்னிப்), பாசிமுளை (தவுகே) மற்றும் எண்ணையில் பொரிக்கப்பட்ட டோஃபு (டோஃபு பொக் மற்றும் யூ தியாயூ) ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகின்றது. ரோஜாக் மேல் ஊற்றப்படும் சாறு பெரும்பாலும் பெலாச்சான் (இறால் விழுது), நீர், சீனி, எலுமிச்சைச்சாறு, மிளகாய் ஆகியவற்றால் செய்யப்படும். அதன் மேல் நொறுக்கப்பட்ட வேர்க்கடலை தூவப்படும்.
பினாங்கு ரோஜாக் ஏறக்குறைய பழ ரோஜாக் போன்றது. ஆனால், இதில் கூடுதல் பொருட்களாக கொய்யாப்பழம், ரோஜா ஆப்பிள், மாங்காய் மற்றும் கணவாய் பொறிகள் போன்றவை சேர்க்கப்படும். ரோஜாக்கான சாறு கெட்டியான குழம்பு தன்மை உதாரணத்திற்கு கேரமல் கெட்டித்தன்மை போல் இருக்கும்.
சோதோங் கங்கோங் மலேசிய முழுதும் மிகவும் பிரசித்திப் பெற்ற உணவு. இது பெரும்பாலான ஒட்டுக் கடைகளில் எளிதாக கிடைக்கும். இந்த ரோஜாக், கணவாய் (கணவாய் மீன்) மற்றும் நீர் கீரை (கங்கோங்), வெள்ளரிக்காய், டோஃபு, வேர்க்கடலை, மிளகாய் மற்றும் சோஸ் ஆகியவற்றால் செய்யப்படும்.
மாமாக் ரோஜாக் அல்லது பசும்போர் என்றும் அழைக்கப்படும் இந்தியர் ரோஜாக்கில், கெட்டியான இனிப்பும் காரமும் சேர்ந்த வேர்க்கடலை சாஸ் கலக்கப்படும். இதில் அவித்த கிழங்குகள், அவித்த முட்டைகள், பாசிமுளை (தவுகே) போன்ற பொருட்கள் சேர்க்கப்படும். சில இந்தியர் ரோஜாக்களில் டோஃபு, நன்கு பொறிக்கப்பட்ட பலகாரப் பொறிகள், இறால் பொறியல்கள் அல்லது கணவாய் பொறியல்கள் போன்ற பொருட்களும் சேர்க்கப்படும்.
ரோஜாக், உணவகங்களில், மாமாக் கடைகளில், நகரும் உணவு தள்ளுவண்டிகளில் மற்றும் ஒட்டுக் கடைகளில் விற்கப்படும் ஒரு பொதுவான உணவு வகையாகும்.
3. ரொட்டி சானாய்
ரொட்டி சானாய் என்பது மலேசியாவில் பெரும்பாலான மாமாக் கடைகளில் கிடைக்கும் இந்திய தாக்கம் கொண்ட ஒரு வகையான பரோட்டாவாகும். இந்த மாமாக் கடைகள், மலேசியாவில் புலம் பெயர்ந்த இந்திய முஸ்லிம்களால் மேம்படுத்தப்பட்ட இந்திய பாணியிலான உணவு வகைகளுக்குப் பிரசித்திப் பெற்றது. அப்பக்கல்லில் சுடுவதற்கு முன் ரொட்டி சானாய் மாவைக் கைகளால் மேலே வீசி சுழற்றி தட்டுவதால் இதனை சில சமயங்களில் சீன மொழியில் “பறக்கும் ரொட்டி” என அழைக்கின்றனர். பெரும்பாலும் இதனை “印度煎饼”, அதாவது இந்திய பேன்கேக் என்றும் குறிப்பிடுகின்றனர். பாரம்பரியமாக, ரொட்டி சானாயுடன் பருப்பு குழம்பு அல்லது மாமாக் உணவகங்களில் பிரசித்தி பெற்ற மற்ற குழம்புகளான மீன் கறி, கோழிக்கறி, ஆட்டுக்கறி மற்றும் மற்ற கறிகளுடனும் பரிமாறுவார்கள். ரொட்டி சானாயில் வெள்ளைச் சக்கரையைத் தூவியும் பரிமாறுவார்கள். இது இனிப்பு விரும்பி சாப்பிடுபவர்களுக்குப் பிடித்த ஒன்றாகும்.
வழக்கமான முறையைத் தவிர்த்து இன்னும் பல வகையான ரொட்டி சானாய்களும் உண்டு. உதாரணத்திற்கு முட்டை ரொட்டி, திசு ரொட்டி என்பது காகிதம் போல் மிக மெல்லிசாகவும் மொறு மொறுவென்றும் இருக்கும், வெங்காய ரொட்டி, வெங்காய முட்டை ரொட்டி, வாழைப்பழ ரொட்டி, பிளாந்தா ரொட்டி பெரும்பொலும் சீனியுடன் பரிமாறப்படும். இப்படி இன்னும் பலவகை உள்ளன.
4. நாசி லெமாக்
நாசி லெமாக் (Nasi lemak) மலாய் சமூகத்தினரின் உணவு வகைகளில் ஒன்றாகும். அது தேங்காய் பாலிலும் பாண்டான் இலையைக் கொண்டும் சமைக்கப்படும் சோறு ஆகும். இது மலேசியாவின் தேசிய உணவாகக் கருதப்படுகிறது. இதை எங்கு வேண்டுமானலும் எளிதில் பெறலாம். இந்த உணவு அண்டை நாடுகளான இந்தோனேசியா, சிங்கப்பூர், புரூணை மற்றும் தெற்கு தாய்லாந்திலும் பிரசித்தி பெற்றது.
பராம்பரிய நாசி லெமாக்கில் நெத்திலி, சம்பல், பொறித்த வேர்க்கடலை மற்றும் அவித்த முட்டை ஆகியவை உள்ளடக்கி இருக்கும். பெரும்பாலான உணவகங்களில் வரி மட்டி (cockles) சம்பலுடன் பொறித்த முட்டை, கணவாய் சம்பல், பொறித்த கோழி, ரெண்டாங், மீன் சம்பல் இன்னும் பலவற்றுடன் நாசி லெமாக் பரிமாறப்படுகின்றது. நீங்கள் சைவ உணவுப் பிரியர் எனில், வருத்தப்பட வேண்டாம். காரணம் நிறைய உணவகங்கள், உதாரணத்திற்கு கோலாலம்பூரில் உள்ள சிம்பிள் லைஃப் (Simple Life) மற்றும் ஜாலான் உஜோங், மலாக்காவில் உள்ள யம்மி கார்டன் (Yummy Garden) உணவகங்களில் சைவ நாசி லெமாக் கிடைக்கும். இந்த உணவகங்களில் நெத்திலிக்குப் பதில் மாதிரி நெத்திலிகள் பரிமாறப்படுகின்றன.
5. சீ ச்சோங்க் ஃபன்
சீ ச்சோங்க் ஃபன் என்பது அரிசி மாவில் செய்யப்படும் சுருள் மீ உணவாகும். இது ஒரு கந்தோனீஸ் வகை உணவாகும். இந்த உணவு தெற்கு சீனா மற்றும் ஹாங் காங்கிலிருந்து தோன்றியது. மலேசியாவில் மற்றும் சிங்கப்பூரில் பொதுவாக சீ ச்சோங்க் ஃபன் கருப்பு நிற இனிப்பு சோயா சாஸ்ஸில் பரிமாறப்படும். பினாங்கில் இந்த உணவில் இறால் விழுதைப் பயன்படுத்துவார்கள். இதுவும் கருப்பு நிறத்தில் இனிப்பாக இருக்கும். ஆனால், இது டோஃபி (toffee) போன்று கெட்டியான குழம்பு தன்மை கொண்டிருக்கும்.
உணவுகளின் மற்றுமொரு தலைநகரமான ஈப்போவில், சீ ச்சோங்க் ஃபன்னை பெரும்பாலும் இரண்டு வகையான முறையில் தயாரிப்பார்கள். முதல் வகையில் ச்சோங்க் ஃபன் மிகக்குறைவான சாஸ்ஸிலும் (ட்ராய்), இரண்டாவது முறையில் நிறைய சாஸ்ஸுடனும் பரிமாறப்படும். மிகக் குறைவான சாஸ்ஸில் பரிமாறப்படும் சீ ச்சோங்க் ஃபன்னுடன் எள், சோயா சாஸ், சிறிய வெங்காயம், வெங்காய எண்ணெய், மிளகாய் சாஸ் மற்றும் ஊறவைத்த பச்சை மிளகாய் போன்றவை சேர்க்கப்படும். நிறைய சாஸ்ஸுடன் பரிமாறப்படும் சீ ச்சோங்க் ஃபன்னை கறி மற்றும் காளான் குழம்புடனும் பரிமாறுவார்கள்.
சில இடங்களில் இந்த உணவைப் பரிமாறும் விதத்தில் சில மாற்றங்கள் இருந்தாலும், இதனை எல்லா இடங்களிலும் பெற முடியும்.
6. அப்பம் பாலிக்
பான் ஜியான் பலகாரம் (மடிக்கப்பட்ட பேன்கேக்) என்றும் அழைக்கப்படுகின்றது அப்பம் பாலிக். இது தென்கிழக்காசியாவில் அப்பம் சுடும் பாத்திரத்தில் தயாரிக்கப்படும் பேன்கேக் ஆகும். இது மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் புரூணை போன்ற நாடுகளில் ஒட்டுக் கடைகளில் விற்கப்படுகின்றது. இந்த பேன்கேக்கிற்கான கலவை, மாவு, தேங்காய்ப்பால், தண்ணீர், சீனி, முட்டை, பேக்கிங் சோடா போன்ற பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. அப்பம் பாலிக்கினுள் நொறுக்கிய வேர்க்கடலையுடன் சீனி, காய்ந்த தேங்காய்தூள் மற்றும் சோள விழுது ஆகியவை நிரப்பப்படும். இந்த உணவு மலேசிய தேசிய பாரம்பரிய துறையினால் பாரம்பரிய உணவென்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
7. கறி மீ
கறி மீ அதிசுவையும் தனித்தன்மையும் வாய்ந்த ஓர் உணவாகும். இது சீனர்கள் மற்றும் இந்தியர்களின் உணவிலிருந்து உருவானது. கறி மீ மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் கிடைக்கும். இது பொதுவாக மெல்லிசான மஞ்சள் மீ அல்லது பீஹூன்னுடன் காரமான கறி சூப், தேங்காய்ப்பால், மிளகாய் சாந்து மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட டாஓ-பொக் (காய்ந்த டோஃபு), இறால், கணவாய், வரி மட்டி (cockles) மற்றும் புதினா இலைகள் போன்றவை கொண்டு தயாரிக்கப்படும்.
8. பினாங்கு ஹோக்கியான் மீ
பினாங்கு ஹோக்கியான் மீ மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பரவலாக கிடைக்கும். இது சீனாவில் உள்ள வுஜியான் (ஹோக்கியான்) என்ற மாகாணத்தில் தோன்றிய பிரபலமான மீ வகையாகும். பாரம்பரியமாக, இது காரமான இறால் சூப்பு, கோழி இறைச்சி அல்லது பன்றி இறைச்சி, கணவாய், இறால், ஃபிஷ் கேக், நீர் கீரை (water spinach) மற்றும் சம்பல் போன்றவற்றுடன் பரிமாறப்படும்.
இது குறிப்பாக பினாங்கில் மிகவும் பிரபலமான உணவு வகையாகும் மற்றும் இதன் சூப் மிகவும் ருசியாகவும் அதிசுவையானதாகவும் இருப்பதால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
9. சாத்தே
சாத்தே என்பது இரும்பு அல்லது கம்பால் ஆன குச்சியில் இறைச்சிகளை செருகி பின் அவைகளை நெருப்பில் வாட்டி தயாரிக்கப்படும் ஒரு வகை உணவாகும். மலேசியாவில் இதனை வேர்க்கடலை சட்னி, வெங்காயம் மற்றும் வெள்ளரிக்காயுடன் பரிமாறுவார்கள். சாத்தே கோழியிறைச்சி, ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, இன்னும் பலவற்றை கொண்டு தயாரிக்கப்படுகின்றது. சாத்தே கரி நெருப்பில் வாட்டப்படுகின்றது.
இது மலேசியாவில் உள்ள உணவகங்களில், ஒட்டுக் கடைகளில் மற்றும் இரவு சந்தைகளில் பரவலாக கிடைக்கும். சைவ சாத்தேவை நீங்கள் நிறைய சைவ உணவங்களில் உதாரணத்திற்கு கேச்சரா ஓசசிஸ் (Kechara Oasis) மற்றும் சீக்ரெட் ரெசிபியில் (Secret Recipe) பியோண்ட் வெஜ்ஜியில் (Beyond Veggie) பெறலாம்.
சாத்தேவை பொதுவாக மற்றுமொரு உணவான கெத்துபாட்டுடன் சாப்பிடுவார்கள். இது வைர வடிவம் கொண்ட பனை இலைக்குள் மடிக்கப்பட்ட சோறாகும். இதை பிரதான உணவாகவும் அல்லது சோறுக்குப் பதிலும் சாப்பிடுவார்கள்.
சாத்தேவுடன் பரிமாறும் பொழுது, பனை இலையிலிருந்து சோறை தனித்து பிரித்து வைப்பார்கள்.
10. லோக் லோக்
லோக் லோக் சீனர்களின் ஸ்தீம்போட்(Steamboat) வகையை சார்ந்த உணவாகும். இந்த வகை உணவு மெல்லிய குச்சியில் செருகப்பட்டு பின்பு கொதிக்கும் சூப்பினுள்ளிட்டு வேகவைக்கப்படுகிறது. வெந்த பிறகு இந்த உணவை பல சுவைக்கொண்ட சாஸ்களுடன் சேர்த்து உண்ணலாம். இதன் சுவையை மேலும் மெருகூட்டும் வகையில் பொதுவாக இந்த உணவு காரமான வேர்கடலை சாஸ், மிளகாய் சாஸ் அல்லது இனிப்பு சாஸ்களுடன் உட்கொள்ளப்படுகிறது.
லோக் லோக் மலேசியாவின் பெரிய மற்றும் சிறிய நகரங்களிலுள்ள வீதியோர கடைகளிலும், உணவு மையங்களிலும் மற்றும் உங்கள் அருகாமையிலுள்ள கலகலப்பான உணவு சந்தைகளிலும் கிடைக்கிறது. லோக் லோக் கடித்து உண்ணக்கூடிய அளவில் இருக்கும் வழுக்கு மட்டி(clams), வரி மட்டி(cockles), பன்றி குடல், பன்றி ஈரல், சாசெஜ், மீன் உருண்டைகள்(ஃபிஷ் பால்), இறைச்சி உருண்டைகள், கணவாய் உருண்டைகள், இறால், காய்கறிகள், சைவ இறைச்சி வகைகள், காளான் வகைகள் தவிர, பொறித்த வன்தான்(wantons) மற்றும் பொறித்த டோஃபு தாள்(bean curd skins) போன்ற சில சமைத்த பொருட்களையும் உள்ளடக்கியதாகும்.
11. குய் தியாவ் த்ங்
குய் தியாவ் த்ங், கோழி அல்லது வாத்து சூப்பில் பரிமாறப்படும் சீனர்களின் பாரம்பரிய தட்டை மீ உணவு வகையாகும். ஃபிஷ் கேக், ஃபிஷ் பால், கொத்திய கோழி அல்லது வாத்திறைச்சி துண்டுகள், நறுக்கிய வெங்காயத்தாள், பாசி முளை(தவுகே) போன்ற பொருட்களை உள்ளடக்கிய இந்த உணவு மிளகாய் சாஸ்சுடன் பரிமாறப்படுகிறது. இது உண்மையிலேயே மிகவும் ருசியான, பாரம்பரியமும் பிரபலமும் மிக்க மலேசிய உணவாகும். இந்த உணவு சைவமாகவும் கிடைக்கப்பெறுகிறது.
நீங்கள் பயண நிமித்தமாகவோ அல்லது விடுமுறை நிமித்தமாகவோ மலேசியாவிற்கு வருகைப்புரிந்தால், கண்டிப்பாக பினாங்கு மாநிலத்தின் குய் தியாவ் சூப்பை சுவைத்தே தீர வேண்டும். அங்கே தயாரிக்கப்படும் குய் தியாவ் த்ங்-கின் தனிப்பட்ட சுவை அதன் பிரசித்திக்கு பெயர்போனது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.
12. சார் குவாய் தியாவ்
சார் குவாய் தியாவ் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் கிடைக்கப்பெறும் உலக பிரசித்திப்பெற்ற உணவு வகையாகும். மிகவும் உயர்ந்த சூட்டில் சார் குவாய் தியாவ்(தட்டை மீ), அதனுடன் தண்ணீர் சோயா சாஸ், கெட்டி சோயா சாஸ், மிளகாய் சாந்து, சிறிதளவு இறால் விழுது, முழு இறால், வரி மட்டி சதை, பாசி முளை(தவுகே) மற்றும் நறுக்கிய குச்சாய்தாள்(Chinese chives) ஆகியவற்றை சேர்த்து பிரட்டி இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. பொதுவாக இந்த உணவு முட்டை, சீன சாசெஜ் துண்டுகள், ஃபிஷ் கேக், பாசி முளை(தவுகே) ஆகியவற்றையே கொண்டு தயாரிக்கப்படுகிறது, இருப்பினும் சில வேளைகளில் வேறு பொருட்களும் இதில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. பாரம்பரிய சார் குவாய் தியாவ் பன்றி நெய்யில், பன்றி கொழுப்பின் மொருமொரு துண்டுகளுடன்(croutons) பிரட்டப்படுகிறது. உணவின் மணத்தை மெருகூட்டும் வண்ணம் பொதுவாகவே சார் குவாய் தியாவ் வாழை இலை பரப்பிய தட்டின் மேல் பரிமாறப்படுகிறது. சுவைமிகுந்த சார் குவாய் தியாவை சைவமாகவும் தேவையின் அடிப்படையில் அநேக வியாபாரிகள் தயாரித்துக் கொடுக்கின்றனர்.
13. வன்தான் மீ
வன்தான் மீ, சீனாவின் குவாங்சாவ் நகர் பகுதியிலிருந்து தோன்றிய கந்தோனீஸ் வகை உணவாகும். இது ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளிலும் பரவலாக கிடைக்கின்றது. இந்த உணவு பொதுவாக இரண்டு விதமாக பரிமாறப்படுகிறது. முதல் ரகத்தில், வன்தான் மீ கோழி சூப்புடன் பரிமாறப்படுகிறது. இரண்டாவது ரகத்தில் இந்த மீ கருப்பு சோயா சாஸ்சுடன் பரிமாறப்படுகிறது. கைலான் கீரை(Chinese kale), வன்தான் குவியல், சீன ஐந்து மசாலாவில் வாட்டிய பன்றி இறைச்சி மற்றும் வெங்காயத்தாள் உள்ளிட்ட பொருட்கள் இந்த உணவின் மீது தூவப்படுகின்றன. மலேசியாவின் பெரும்பாலான உணவு மையங்களில் வன்தான் மீ கிடைக்கின்றது.
14. ஓத்தாக் ஒத்தாக்
ஓத்தாக் ஒத்தாக் இந்தோனேசியாவிலிருந்து தோன்றிய உணவாகும். இது மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றது. ஓத்தாக் என்றால் மலாய் மற்றும் இந்தோனேசிய மொழிகளில் மூளை என்று பொருள்படுகிறது. மூளையின் அமைப்பை போல மென்மையாகவும் கொழகொழ தன்மையுடனும் காணப்படுவதாலும் இது ஓத்தாக் ஒத்தாக் என்று அழைக்கப்படுகிறது.
ஓத்தாக் ஒத்தாக் பொதுவாக சோறுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. மீன், மசாலா மற்றும் லீக்(leek) ஆகிய முக்கிய மூலப்பொருட்களை வாழை இலையினுள் வைத்துக்கட்டி இதனை தயாரிக்கின்றனர். ஞோஞ்யா கலர்ஸ் (Nyonya colours) மற்றும் லோரொங் செராதுஸ் தாஹுன் (Lorong Seratus Tahun) போன்ற பிரபலமான உணவகங்களில் நீங்கள் இந்த உணவை பெறலாம். மாதிரி இறைச்சியைக் கொண்டு தயாரிக்கப்பட்டு சைவமாகவும் இந்த உணவு கிடைக்கின்றது.
15. மலிவு பீஹூன் பிரட்டல்
மலிவு பீஹூன் பிரட்டல் மலேசியா மற்றும் சிங்கப்பூரின் சிக்கனமான உணவாகும். இது குறிப்பாக காலை உணவு நேரங்களில் பிரபலமாக உள்ளது. மலிவு பீஹூன் முட்டைகோஸ் மற்றும் முட்டைபோன்ற மிக சில எளிய மூலப்பொருட்களை மட்டுமே கொண்டு மிகவும் மலிவாக தயாரிக்கப்படுகிறது.
இது மிகவும் மலிவான, அதே வேளையில் ருசியான உணவாகும். இந்த மலிவு பீஹூனை காய்கறி குழம்பு, பயிற்றங்காய் சம்பல், ஃபிஷ் கேக், முட்டைகோஸ் மற்றும் முட்டை போன்ற வேறு சில பக்க உணவுகளோடும் சேர்த்து உண்ணலாம்.
16. மீ கோரெங்
மீ கோரெங், எளிமையான சுவைமிக்க உணவாகும். மலேசியா, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த உணவு மிக சாதாரணமாக கிடைக்கின்றது. மீ கோரெங் என்றால் மலாய் மொழியில் மீ பிரட்டல் என்று அர்த்தம். இந்த உணவு பெரும்பாலும் மீன், கோழி, இறால், மிளகாய் சாந்து, சீன முட்டைகோஸ், முட்டைகோஸ், தக்காளி, முட்டை, சிறிய வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மலேசியா முழுவதும் அமைந்திருக்கும் மாமாக் ஒட்டுக்கடைகளில் இந்த உணவை நீங்கள் எளிதாக பெறமுடியும்.
17. மலிவு சோறு
மலிவு சோற்றை பொதுவாக கலந்த சோறு என்றும் கூறுவதுண்டு. இது மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளில் கிடைக்கிறது. குறிப்பிட்ட ஒரு பக்க உணவை மட்டும் சார்ந்திராத இந்த மலிவு சோறு பற்பல உணவு கடைகளில் கிடைக்கின்றது. வெவ்வேறு வியாபாரிகளுக்கு தக்கவாறு 10 முதல் 20 பக்க உணவுகள் வரை சோற்றுடன் உட்கொள்வதற்கு ஏதுவாக தயாரித்து வைக்கப்படுகின்றன. மலிவு சோறு பொதுவாக சீனர் உணவு என்றே கருதப்படுகிறது. பெயருக்கு ஏற்றவாறே இந்த சோறும் அதன் பக்க உணவுகளும் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன.
18. பாக் குத் தே
பாக் குத் தே சீனாவிலுள்ள தியோவ் சிவ் (Teow Chew) சமூகத்தினரின் மிக பிரபலமான உணவு வகையாகும். இது மலேசியா, சிங்கப்பூர், சுமத்திரா, தென் தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கின்றது. பன்றி எலும்பு தேநீர் என்பதே பாக் குத் தேவின் நேரடி மொழிப்பெயர்ப்பாகும். இது பொதுவாக சீன மூலிகைகள், பூண்டு, இலவங்கப்பூ, கறிப்பட்டை, காளான், சொய் சம்(choi-sum), டோஃபு தாள் மற்றும் பொறித்த டோஃபு ஆகியவற்றோடு கொதிக்கவைப்படுகிறது. இந்த சூப்போடு சாப்பிடுவதற்கு சோறு மற்றும் யூதியாவ் அல்லது யூ சார் குவாய்(you char kwai) பரிமாறப்படுகிறது. மலேசியாவில்லுள்ள பல உணவகங்கள் குறிப்பாக கோலாலம்பூரின் கிள்ளான் நகரிலுள்ள உணவகங்கள் இந்த உணவை மிக சிறப்பாக தயாரிப்பதில் பிரசித்தி பெற்றுள்ளன.
19. கேல் (KL) ஹோக்கியன் மீ
KL ஹோக்கியன் மீ கரி அடுப்பில் பிரட்டப்படும் கோலாலம்பூரின் தனித்தன்மை மிக்க கருப்பு நிற மீயாகும். இந்த மீ பன்றி கொழுப்பு, பூண்டு, பன்றி இறைச்சி, பன்றி ஈறல், இறால், கணவாய் மற்றும் முட்டைகோஸ் ஆகியவற்றுடன் பிரட்டப்படுகிறது. மீயை பிரட்டிக்கொண்டிருக்கும் பொழுதே சாஸ்களின் கலவை மெதுவாக சேர்க்கப்படுகிறது. ஹோக்கியன் மீ சாஸ்களின் கலவையை மெள்ள மெள்ள உறிந்து கொண்டு கெட்டியான குழம்பு தன்மையுடன் விளங்குவதற்கு இது வழிவகுக்கின்றது. இந்த உணவைத் தயாரிக்கும் பொழுது கெட்டி சோயா சாஸ் தாராளமாக சேர்க்கப்படுகிறது.
20. நாசி கண்டார்
நாசி கண்டார் பினாங்கு மாநிலத்திலிருந்து தோன்றிய பிரபலமான வடக்கு மலேசிய உணவாகும். மணங்கமழும் சோற்றில் பொதுவாக பலவகை குழம்புகளை கலவையாக ஊற்றி பக்க உணவுகளுடன் இது பரிமாறப்படுகின்றது. பொறித்த கோழி, ரெண்டாங், ஆடு, பொறித்த மீன், பொறித்த இறால், பொறித்த கணவாய், மாட்டிறைச்சி துண்டுகள் தவிர மேலும் பல பதார்த்தங்களை இந்த சோற்றுடன் சேர்த்து உண்ணலாம். கத்தரிக்காய், வெண்டை, இலைக்கோசு(lettuce) மற்றும் பொறித்த பாகற்காய் போன்ற சைவ பக்க உணவுகளும் இதனுடன் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. பற்பல வகையான குழம்புகளும் பக்க உணவுகளும் இந்த நாசி கண்டாருக்கு சிறந்த பல்வேறு சுவையைக் கொடுக்கின்றன.
21. நாசி டாகாங்
நாசி டாகாங் மலேசியா மற்றும் தென் தாய்லாந்து நாட்டில் கிடைக்கப்பெறும் உணவாகும். இது தேங்காய் பால் மற்றும் வெந்தயம் கலந்து தயாரிக்கப்பட்ட தனிமணமுடைய சோறாகும். இந்த சோற்றுடன் மீன் குழம்பு, அவித்த முட்டை, காய்கறிகள் அச்சார் (pickled vegetables) மற்றும் கோழி அல்லது மாட்டிறைச்சி ரெண்டாங் போன்றவை சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. இந்த உணவு கிழக்கு தீபகற்ப மலேசியாவின் மாநிலங்களான கிளாந்தான், திரங்கானு மற்றும் தென் தாய்லாந்தில் கிடைக்கும்.
22. நாசி பிரியாணி
நாசி பிரியாணி அல்லது பிரியாணி சோறு பாசுமதி அரிசி, தாளிப்புப் பொருட்கள், தயிர், இறைச்சி அல்லது காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்தியர்களின் கலவை சோறாகும். இதன் மூலப்பொருட்கள் மற்றும் தாளிப்புப் பொருட்கள், ஜாதிக்காய், மிளகு, கிராம்பு, நெய், ஏலக்காய், பிரியாணி இலை, கறிப்பட்டை, மல்லித்தாள், புதினா, இஞ்சி, வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.
காளான் பிரியாணி, மாட்டிறைச்சி பிரியாணி மற்றும் காய்கறிகள் பிரியாணி போன்ற பல்வேறு பிரியாணி ரகங்கள் வழக்கத்தில் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை மலேசியாவின் மாமாக் கடைகளிலும் இந்திய உணவகங்களிலும் கிடைக்கின்றன.
23. சென்டோல்
சென்டோல் இந்தோனேசியாவிலிருந்து தோன்றிய பாரம்பரியமிக்க இனிப்பு பதார்த்தமாகும். தேங்காய் பால், அரிசி மாவு மற்றும் பண்டான் இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட புழு போன்ற பச்சை நிற ஜெல்லி, அறைக்கப்பட்ட ஐஸ்க்கட்டி மற்றும் பனை வெல்லம் ஆகியவையே இந்த பதார்த்தத்தில் வழக்கமாக சேர்க்கப்படும் பொருட்களாகும்.
சென்டோல் மலேசியா முழுவதும் பரவலாக கிடைக்கப்பெறுகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் சிகப்பு கச்சான், சின்சாவ் எனப்படும் கிராஸ் ஜெல்லி, சோள விழுது, பூளூட் சோறு போன்ற பல்வேறு கூடுதல் பொருட்களுடனும் சென்டோல் பரிமாறப்படுகிறது. சமீப காலமாக டுரியான் மற்றும் பலாப்பழத்துடனும் சென்டோல் பரிமாறப்படுகிறது.
24. ஐஸ் கச்சாங்
ஐஸ் கச்சாங் உண்மையில் கச்சான் ஐஸ் என்று பொருள்படுகிறது. இது பிரபலமான மலேசிய உணவு பதார்த்தமாகும். பாரம்பரிய ஐஸ் கச்சாங் அறைத்த ஐஸ்க்கட்டி மற்றும் சிகப்பு கச்சானை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைக்கப்பெறும் பல்வேறு மூலப்பொருட்களால், ஐஸ் கச்சாங் பல பிரகாசமான வண்ணங்களில் பழத்துண்டுகள் உள்ளிட்ட பலவிதமான பொருட்கள் சேர்க்கப்பட்டு பரிமாறப்படுகிறது.
இது வழக்கமாக பனம்பழம், சிகப்பு கச்சான், சோள விழுது, சின்சாவ் எனப்படும் கிராஸ் ஜெல்லி, ஜெல்லி துண்டுகள், வேர்கடலை மற்றும் ஐஸ்கிரீமுடன் பரிமாறப்படுகிறது. தயாரிப்பின் இறுதியில் மலை வடிவில் அமைதிருக்கும் அறைத்த ஐஸ்க்கட்டியின் மீது சிறிது பண்டோங் சீராப் (சிகப்புநிற சீனி பாகு) ஊற்றப்படுகிறது. அதன் மேல் தண்ணீர் பால் மற்றும்/அல்லது தேங்காய் பால், தொடர்ந்து கெட்டிப்பால் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. மலேசியா முழுவதும் பல்வேறு வகையான ஐஸ் கச்சாங் பரவலாக கிடைக்கப்பெறுகின்றன. சில வகைகளில் தேங்காய் பாலுக்கு பதிலாக பனை வெல்லம் சேர்க்கப்படுகிறது.
25. டுரியான்
டுரியான் தென்கிழக்காசியாவின் மிக பிரபலமான பழமாகும். தனித்தன்மைமிக்க மணமும் அமைப்பும் கொண்ட டுரியான், பழங்களின் அரசனாக கருதப்படுகிறது. டுரியான் மிக கூர்மையான முட்களைக்கொண்ட பழமாகும். உண்ணத்தகாத அதன் வெளிப்புற தோல் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. அதன் விதைகள் மஞ்சள் நிற சதையால் மூடப்பட்டு கெட்டியான கஸ்டர்ட் போன்ற தன்மையுடன் சாப்பிடுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளன.
கடுமையான மணத்தைக்கொண்ட காரணத்தால் டுரியான் சில உணவகங்களிலும் தங்கும் விடுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது. டுரியான் நீங்கள் விரும்பும் அல்லது வெறுக்கும் ஒரு பழமாக இருக்கின்றது.
சைவ உணவுகளின் தேர்வு
உலகம் முழுவதிலுமுள்ள சைவ உணவு பிரியர்களே, நீங்களும் கூட மலேசிய உணவு வகைகளை ருசித்து உண்ணலாம். கீழே பட்டியலிடப்பட்டுள்ள உணவகங்கள் பாரம்பரிய முறையில் பல்வேறு சைவ உணவுகளைத் தயாரித்து வழங்குகின்றன. இது அனைத்து பெரிய மற்றும் சிறிய நகரங்களில் அமைந்துள்ள சைவ உணவகங்களின் சிறிய அளவிலான பட்டியலாகும்.
Kechara Oasis Jaya One
முகவரி:
63 & 67-P1, Block D,
The Suites, Jaya One,
No 72A, Jalan Universiti,
46200 Petaling Jaya,
Selangor Darul Ehsan.
இணையத்தளம்: http://www.kecharaoasis.com
தொலைபேசி எண்: +6012 8188 384
இயங்கும் நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை, காலை 11.00-மதியம் 3.00 & மாலை 6.00- இரவு 10.00
Kechara Oasis Viva Home Mall
முகவரி:
Lot 2.08 2nd Floor,
West Wing,
Viva Home Mall,
85 Jalan Loke Yew,
55200 Kuala Lumpur.
இணையத்தளம்: http://www.kecharaoasis.com
தொலைபேசி எண்: +6012 8188 384
இயங்கும் நேரம்: திங்கள் முதல் ஞாயிறு வரை, காலை 11.00-மதியம் 3.00 & மாலை 6.00- இரவு 10.00
Be Lohas, KLIA2
முகவரி:
L2M-19, Level 2M,
Terminal KLIA2,
Jalan KLIA 2/1,
64000 Sepang.
தொலைபேசி எண்: +608 7878 165
இயங்கும் நேரம்: காலை 6.00-இரவு 12.00
Water Lily Vegetarian Restaurant
முகவரி:
23 Jalan Tun H S Lee,
50000 Kuala Lumpur.
தொலைபேசி எண்: +603 2070 6561
இயங்கும் நேரம்: காலை 10.00-இரவு 9.30
Beyond Veggie
மலேசியாவில் ஏறக்குறைய 14 Beyond Veggie உணவகங்கள் இருக்கின்றன.
இயங்கும் நேரம்: காலை 10.00-இரவு 11.00 அல்லது உணவகங்கள் அமைந்துள்ள பேரங்காடிகளின் நேர கட்டுப்பாட்டின்படி இயங்குகின்றன.
Veggie Planet
முகவரி:
41&43, Jalan Melaka Raya 8,
Taman Melaka Raya,
75000 Malacca.
தொலைபேசி எண்: +606 2922 819
இயங்கும் நேரம்: காலை 9.00-இரவு 10.00
Simple Life
மலேசியாவில் ஏறக்குறைய 11 Simple Life உணவகங்கள் இருக்கின்றன.
இயங்கும் நேரம்: உணவகங்கள் அமைந்துள்ள பேரங்காடிகளின் நேரகட்டுப்பாட்டின்படி இயங்குகின்றன.
Yummy Garden Food Court
முகவரி:
16-A, Jalan Ujong Pasir,
Melaka.
தொலைபேசி எண்: +6012 601 5677
இயங்கும் நேரம்: மாலை 5.00-அதிகாலை 5.00
இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு:
- Vegetarian Restaurant Review
- Nice Indian Food
- Top Reasons to Take Warm Turmeric Water in the Morning
- Can You Make This?
- Dr Jiang’s DELICIOUS HEALTHY RECIPES/videos
- 50 Incredible Vegetarian/Vegan Recipes!
- Saffron
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
நன்றி ரின்ப்போச்சே இந்த அற்புதமான கட்டுரையை வழங்கியதற்கு.
நாவில் சுவையூறும் இந்த 25 வகையான உணவுகள், மலேசிய உணவு பாராம்பரியத்தின் சிறப்பையும் அதன் மாறுபட்ட தன்மைகளையும் எடுத்துக் காட்டுகின்றன.மலேசியாவில் வாழ்வதற்கோ அல்லது சுற்றிப் பார்ப்பதற்கோ மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்று அதன் உணவு வகைககள் என்பது .
http://bit.ly/2ktvouW